உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் நடைபெற்ற திருக்கோவிலில் நேற்று முன்தினம் அதிகாலை கொடியேற்றத்துடன் வைகாசி மாத பிரம்ம உற்சவம் கோலாகலமாக தொடங்கியது.
மூன்றாம் நாளான இன்று வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள வாகன அலங்கார மண்டபத்தில் மல்லி, ரோஜா உள்ளிட்ட பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நீளம்,ரோஸ் வண்ண வெண்பட்டு உடுத்தி வரதராஜ பெருமாள் கருடன் சுமந்தவாறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
கோவிலில் இருந்து புறப்பட்ட வரதராஜா பெருமாள் ரங்கசாமி குளம், கீரை மண்டபம், மூங்கில் மண்டபம், பேருந்து நிலையம் மற்றும் நான்கு ராஜ வீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். வழியெங்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீபாராதனை செய்தும் கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். சாமி செல்லும் பகுதியின் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
கருட சேவை உற்சவத்தின்போது காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மூன்று மாவட்டத்தைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று காரணமாக பிரம்மோற்சவம் ரத்து செய்யப்பட்ட நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து கோவிலை கருட சேவை நடைபெறுவதாலும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வரதராஜ பெருமாள் கோயில் காஞ்சிபுரம்
வைணவ தலங்களில் 108 தலங்கள் திவ்யதேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம். அடுத்ததாக திருப்பதி-திருமலை ஏழுமலையானை சொல்வார்கள். மூன்றாவது இடத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தலமாக காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் ஆலயம் திகழ்கிறது.
சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலய மூலவருக்கு தேவராஜபெருமாள் என்று பெயர். உற்சவரை பேரருளாளன் என்று அழைக்கிறார்கள். தாயாருக்கு பெருந்தேவி தாயார் என்று பெயர் சூட்டி உள்ளனர். இத்தலத்து பெருமாள் மலை மீது அமைந்துள்ளார் என்பதற்கு சான்றாக 24 படிகளை ஏறிச்சென்று தரிசிக்க வேண்டி உள்ளது. பெருந்தேவி தாயார் தனி சன்னதியில் நின்று அருள்பாலிக்கிறார்.
அழகான சிற்பங்களைக் கொண்ட நூற்றுக்கால் மண்டபம் இங்கு உள்ளது. இம்மண்டபத்தின் தூண்களில், போர்குதிரை, குதிரை மீது வீரர்கள் மற்றும் பல்வகை சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதற்குள் உள்ள சிறிய நான்கு தூண் கொண்ட மண்டபத்தையும் சேர்த்து நூறு கால் மண்டபம் என அழைக்கப்படுகிறது. இதன் நான்கு மூலைகளில் தொங்கும் கற்சங்கிலிகள் சிற்பக்கலையின் விந்தையாகும். கிழக்கு கோபுரம் ஒன்பது நிலைகளுடன் 180 அடி உயரமுடையது. தற்போது இக்கோபுரம் சிதிலமடைந்துள்ளது.