செங்கல்பட்டு (Chengalpattu News ): முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அரசு சார்பில் பல்வேறு நல திட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன.


இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வெளியீட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: 


இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்


முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில், மருத்துவம் (ம) மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்திட திட்டமிட்டுள்ளது. அதனடிப்படையில் செங்கல்பட்டு சுகாதார மாவட்டம் வெளியம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி, அச்சரப்பாக்கம், ஓட்டேரி அரசு மேல்நிலைப்பள்ளி, வண்டலூர் மற்றும் அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, அனகாபுத்தூர் ஆகிய இடங்களில் ஜூன் 24 காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடக்கிறது.


முகாம்களில் உள்ள வசதிகள் என்னென்ன?


முகாமில் இரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்கோ மற்றும் இசிஜி, பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை, வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளுடன் முழு இரத்த பரிசோதனையும், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை  மற்றும் பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம் மற்றும் மனநலம் மருத்துவம் உள்ளிட்ட பன்னோக்கு மருத்துவ ஆலோசனைகள் சிறப்பு மருத்துவர்கள், இவர்களுடன் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை ஆலோசணைகள் வழங்கப்படவுள்ளது. அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் முகாமில் பங்கேற்க உள்ளனர்.  மேல் சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் சிறப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், தெரிவித்துள்ளார், என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.