செங்கல்பட்டு செவிலியர் கல்லூரியில், ஜம்மு மற்றும்  காஷ்மீர் மாணவர்கள் தொடர்பாக கல்லூரி முதல்வர் விளக்கமளித்துள்ளார். 


கல்லூரி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு:



செங்கல்பட்டில் அரசு செவிலியர்  கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு பிஎஸ்சி நர்சிங் நான்காண்டு பாடத்திட்டத்தின் கீழ், 206 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவற்றில் ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியை சேர்ந்த மாணவர்களும் பயின்று வருகின்றனர். ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியை சேர்ந்த மாணவர்கள் 15 பேர் படித்து வருகின்றனர். இந்தநிலையில் சமூக வலைதளமான எக்ஸ் வலைதளத்தில், ஜம்மு மற்றும் காஷ்மீர் மாணவர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுதப்பட்ட கடிதத்தில், ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியை சேர்ந்த மாணவர்கள் தாடியை எடுக்க வேண்டும் என கல்லூரி நிர்வாகம் சார்பில் கட்டாயப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு இருந்தது. இது தொடர்பாக எந்த சம்பவம் நடைபெறவில்லை என கல்லூரி நிர்வாகம் மறுத்துள்ளது. 


கல்லூரி நிர்வாகம் விளக்கம்:


புகார் தொடர்பாக செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முதல்வர்  ( பொறுப்பு ) பாஸ்கர் கண்ணபிரான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி 65 ஆண்டுகள் பழமையான கல்லூரி. இந்த கல்லூரியில் பல்வேறு வகையான, மருத்துவம் சார்ந்த படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இப்பொழுது புகார் கூறப்பட்டிருக்கும், படிப்பு பிஎஸ்சி நர்சிங். இந்தப் நர்சிங் படிப்பில் , 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். வருடம் தோறும் நடைபெறும் கவுன்சிலிங்கில் தமிழ்நாட்டில் 50 பேர் வந்தால் ஒரு ஐந்து அல்லது ஆறு வேறு மாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் வருவார்கள். 


நர்சிங் படிப்பு என்பது மிக முக்கிய படிப்பு என்பதால் இவர்களுக்கு தேர்வு எழுதும் பொழுது, சுத்தமாக இருக்க வேண்டும் என்பது அவர்களுடைய பணி . ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எப்படி இருக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தல் கொடுத்த வருகிறார்கள். அந்த வகையில் சுத்தமாக இருக்க வேண்டும், உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் கொடுக்கப்படும். 


சம்பந்தப்பட்ட மாணவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் எழுத்து தேர்வு முடித்துள்ளனர். அடுத்ததாக அவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. இந்த சமயங்களில் அவர்களுக்கு எப்பொழுதும் போல், மருத்துவ தேர்வுகள் நடைபெறும் போது என்ன மாதிரியான அறிவுறுத்தல்கள் கொடுக்கப்படுமோ அதே போன்ற அறிவுறுத்தல்கள் தான் கொடுக்கப்பட்டது. 


”கல்லூரி நிர்வாகம் கட்டாயப்படுத்தவில்லை”


சம்பந்தப்பட்ட ட்விட்டரில் கூறப்பட்டிருக்கும் செய்தியை முழுமையாக மறுக்கிறோம். இங்கு அது போன்ற எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை.  கடந்த சில ஆண்டுகளாக இந்திய அளவில் கவுன்சிலிங் மூலம் பல மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். அந்த வகையில் வருடம் தோறும் ஒரு சில ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். 


நோயாளியுடன் கூட இருந்து அனைத்தையும் செய்யக் கூடியவர்கள் தான் இந்த செவிலியர்கள், அவர்கள் சரியாக இருக்க வேண்டும் என அவர்களுக்கு அறிவுரை கொடுப்பது ஒரு ஆசிரியராக எனக்கு எந்த தவறும் தெரியவில்லை. அவர்கள் கூறியது போன்ற ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்பதை மீண்டும் ஒரு முறை உறுதி செய்கிறேன்” எனத் தெரிவித்தார். 


மேலும் மாணவர்கள் யாராவது தாடியை எடுத்து இருக்கிறார்களா என கேள்விக்கு பதில் அளித்து பேசுகையில்,  அதுபோன்று யாரும் செய்யவில்லை. வழக்கமான அறிவுறுத்தல் தான் வேறு ஒன்றும் இல்லை என செய்தியாளர்களும் தெரிவித்தார்.