செங்கல்பட்டு மாவட்டம் பொன் விளைந்த களத்தூர், பழைய காலனி பகுதியை சேர்ந்தவர் துலுக்காணம்(65), இவரது மனைவி சம்பூர்ணம் (58), இவர்களுடைய மகள் ஜெயந்தி (30). இவர்களுடைய மகளை கடந்த 12 வருடங்களுக்கு முன்பு, பொன்விளைந்த களத்தூர் பகுதியில் உள்ள அம்பேத்கர் நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் டார்ஜன் (35) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். டார்ஜன் கடந்த 2014 ஆம் ஆண்டு வரை சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். திருமணமான சில வருடங்களில் சாராய வியாபாரத்தை கைவிட்டு விட்டு, கணவன் மற்றும் மனைவி இருவரும் இணைந்து கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்து வந்து உள்ளனர்.



 

டார்ஜன் மதுவுக்கு அடிமையாகி மனைவியுடன் இணைந்து கொண்டு தொடர்ந்து கள்ளச் சந்தையில் கடந்த சில வருடங்களாக விற்பனை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு காவல்துறையினர் அறிவுறுத்தலின்படி கள்ள சந்தையில் மது விற்பதை கைவிட்டதாக கூறப்படுகிறது. டார்ஜன் மற்றும் ஜெயந்தி ஆகிய இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கள்ளச் சந்தையில் மது விற்பதை நிறுத்திய டார்ஜன், தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். ஜெயந்தியை பணம் கேட்டு அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். 

 

ஜெயந்தி மீதும் டார்ஜனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக கணவன் மற்றும் மனைவிக்கு இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வந்துள்ளது. அதே பகுதி என்பதால் ஜெயந்தியின் தாய் தந்தை இருவரும் டார்ஜனை தொடர்ந்து கண்டித்து வந்துள்ளனர். வழக்கம்போல இன்று வீட்டிற்கு மது போதையில் சேர்ந்த டார்ஜன், உணவு சமைத்து தரவில்லை என்று கூறி ஜெயந்தி இடம் சண்டையிட்டுள்ளார். இருவருக்கும் உள்ள சண்டை, சிறிது கை காலப்பாக மாறி உள்ளது. மருமகன் தன் மகளிடம் சண்டை இடுவதை விரும்பாத அவர்களுடைய தந்தை மற்றும் தாய் இருவரும் தட்டிக் கேட்க சென்றுள்ளனர்.



 

முழு மது போதையில் இருந்த டார்ஜன், தனது மாமனார் துலுக்காணம் மற்றும் மாமியார் சம்பூர்ணம் ஆகிய இருவரை சரமாரியாக கட்டை மற்றும் வீட்டில் இருந்த கத்தி ஆகியவற்றை வைத்து தாக்கியுள்ளார். இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் சண்டையை விலக்கி விட்டுள்ளனர். இருந்தும் மது போதையில் இருந்த டார்ஜன் தனது மாமியாரை சரமாரியாக தாக்கி விட்டு, மாமனாரையும் விரட்டிக்கொண்டு கட்டையால் பலமாக மண்டையில் தாக்கியுள்ளார். இதில் நிலத்தடும் அடி கீழே விழுந்த துலுக்கானோம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 



 

தாக்கியதில் படுகாயம் அடைந்த சம்பூர்ணத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அக்கம் பக்கத்தினர் சேர்த்தனர். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கல்பட்டு தாலுகா காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி தப்பி ஓடிய டார்ஜனை தேடி வருகின்றனர். மது போதையில் மாமனார் மற்றும் மாமியாரை தாக்கிய மருமகனின் கொடூர செயலால் செங்கல்பட்டு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.