தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர்கள் வீடுகளில் இன்று காலை முதல் வருமான வரிச்சோதனை நடைபெற்று வருகிறது. இன்று காலை திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகின்றது. அதேநேரத்தில், சென்னையில் பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அலுவலகத்திலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.


இந்த சூழலில், மற்ற பிரபல படத் தயாரிப்பாளர்களான எஸ்.ஆர்.பிரபு மற்றும் ஞானவேல்ராஜா ஆகிய இருவரது அலுவலகங்களிலும் வருமான வரிச் சோதனை நடைபெற்று வருகிறது.  எஸ்.ஆர். பிரபுவின் தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் காலை முதல் சோதனை நடத்தி வருவது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




தற்போது வருமான வரித்துறையினரால் சோதனை நடத்தப்பட்டு வரும் அலுவலகங்களுக்கு சொந்தக்காரர்களான கலைப்புலி தாணு, எஸ்.ஆர்.பிரபு மற்றும் ஞானவேல்ராஜா கோலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர்கள் ஆவார். தாணு மூத்த திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.


ஞானவேல் ராஜா ஸ்டூடியோ ஸ்கீரின் நிறுவனம் மூலமாக ஏராளமான படங்களை தமிழில் தயாரித்து வருகிறார். நடிகர் சிவகுமார் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான உறவுக்காரரான ஞானவேல் ராஜா சூர்யா நடித்த சில்லுனு ஒரு காதல் படம் மூலமாக இயக்குனரானார். பின்னர், கார்த்தி நடித்த பருத்திவீரன் படத்தை தயாரித்தார்.


சூர்யா நடிப்பில் சிங்கம், மாஸ் என்கிற மாசிலாமணி, சிங்கம் 3, தானா சேந்த கூட்டம் ஆகிய படங்களையும், கார்த்தி நடிப்பில் நான் மகான் அல்ல, சிறுத்தை, அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் ஆல் அழகுராஜா, பிரியாணி, மெட்ராஸ், கொம்பன் ஆகிய படங்களை தயாரித்துள்ளார். இதுதவிர ஏராளமான படங்களை தயாரித்துள்ளார்.




ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவும் சூர்யா, கார்த்திக்கிற்கு நெருங்கிய உறவினர் ஆவார். தொடக்கத்தில், ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்துடன் இணைந்து படத்தயாரிப்பில் ஈடுபட்டு வந்த எஸ்.ஆர்.பிரபு பின்னர் தனியாக படத்தயாரிப்பில் இறங்கினார். அவரது தயாரிப்பில் கார்த்தி நடித்த சகுனி, காஷ்மோரா, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி மற்றும் சுல்தான் உருவாகியுள்ளது. இதுதவிர ஜோக்கர், சூர்யா நடித்த என்.ஜி.கே., அருவி, ராட்சசி ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார்.


பிரபல படத்தயாரிப்பாளர்களான இவர்களது அலுவலகங்களில் காலை முதல் வருமானவரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருவது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரி முறையாக செலுத்தாத காரணத்தாலே இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண