மர்ம விலங்கு நடமாட்டம்
செங்கல்பட்டு அடுத்த தென்மேல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் வளர்த்து வரும் கன்றுக்குட்டி கடந்த இரு தினங்களுக்கு முன்பு மர்ம விலங்கால் கடிபட்டு உயிரிழந்தது. நேற்று முந்தினமும், ஒரு கன்றுக்குட்டி இதேபோல் பலியானது. இதனால் தென்மேல்பாக்கம் கிராம மக்கள் அச்சமடைந்தனர். இதேபோல் கடந்த 18-ம் தேதி செங்கல்பட்டு அருகே அஞ்சூர் கிராமத்தில் புதுப்பேட்டையைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவரின் பசுமாடும் நள்ளிரவில் வாய் மற்றும் தொடை பகுதியில் கடிபட்ட நிலையில் இறந்து கிடந்தது
சிறுத்தை நடமாட்டம் ?
தென்மேல்பாக்கத்தில் இதே பாணியில் கன்றுக்குட்டி ஒன்றும் மர்ம விலங்கு மூலம் கடிபட்டு உயிரிழந்து கிடந்தது. கன்றுக்குட்டிகள் உயிரிழந்த இடம் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இந்த வழியாகத்தான் பள்ளிகளுக்கு மாணவர்கள் சென்று வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்தனர். சிறுத்தை புலியின் நடமாட்டமாக இருக்கலாம் என சமூக வலைதளத்தில் இது குறித்த புகைப்படங்கள் வைரலாக பரவியது.
ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன்பு செங்கல்பட்டு அருகே அஞ்சூர் மற்றும் ஈச்சங்கரணை கிராமங்களில் சிறுத்தைப் புலி நடமாட்டம் அதிகமாக இருந்தது அப்போது நாய், மற்றும் மாடுகளை கடித்து கொன்றது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் சிறுத்தை குறித்து அச்சத்துடன் இருந்து வந்தனர். இதனால் இதுகுறித்து வனத்துறைக்கு பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த் துறையினர் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை, வனத் துறை அதிகாரிகள் தென்மேல்பாக்கம் கிராமத்தில் நேற்று முகாமிட்டனர். உயிரிழந்த கன்றுக்குட்டிகள் எப்படி இறந்தது, எந்த விலங்கு கடித்தது என விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனை அடுத்து, சம்பவம் நடைபெற்ற இடத்தில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் கண்காணிப்பில் இருந்து வந்தனர்.
மக்களுக்கு நிம்மதி
இந்நிலையில், வனத்துறையினர் வைத்த கண்காணிப்பு கேமிராவில் அப்பகுதியில் சுற்றித்திரியும், தெரு நாய்கள் கூட்டமாக வந்து தொழுவத்தில், கட்டியிருக்கும் மாடுகளை கடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் சார்பில் வைக்கப்பட்ட கேமிராக்களை வனத்துறையினர் அகற்றினர். மேலும் அப்பகுதியில் மாடுகளை கொல்லும், தெரு நாய்களை உடனடியாக பிடிக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர். இதனை அடுத்து அப்பகுதி மக்கள் அச்சம் குறைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்