செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டன்(42). இவர் திருப்போரூர் அடுத்த ஆலத்தூரில் உள்ள ஒரு தனியார்  நிறுவனத்தில் கட்டுமானத் துறையில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் ஹேமநாதன் (10), மாமல்லபுரம் அரசினர் மேல்நிலை பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இன்று கோதண்டன் தன் வீட்டு தேவைக்காக தண்ணீர் கேன் வாங்குவதற்காக தனது வீட்டிலிருந்து மகனுடன் கடைக்குச் சென்றுள்ளார்.

 

வீட்டுத் தேவைக்காக தண்ணீர் வாங்க சென்ற தந்தை மகன்

 

இந்நிலையில் அதே பகுதியில் உள்ள பிரதான சாலை அருகே உள்ள வாட்டர்கேன் கடைக்கு வருவதற்காக வயல்வெளி சாலை வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, உயர் அழுத்த மின் கம்பி ஒன்று 4 அடி உயரத்தில் இருந்து அறுந்து அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்துள்ளது. அந்த வழியாக சாலையை கடக்கும்போது, இருசக்கர வாகனத்தில் வந்த கோதண்டன், ஹேமநாதன் என தந்தை, மகன் இருவர் மீதும் மின் கம்பி உரசியது. 

 

துடி துடித்து உயிரிழந்த தந்தை மகன்

 

இதில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே தந்தை,மகன் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பிறகு மின் இணைப்பை துண்டித்து இருவரது உடலையும் மீட்டு பூஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அப்போது அவர்களை சோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்ததாக கூறினர். அதனையடுத்து, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொதுமருத்துவமனைக்கு உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். தந்தை, மகன் இருவரும் ஒரே நேரத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் வடகடம்பாடி கிராமத்தில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையினரிடம் விசாரித்தபோது அஜாக்கிரதை காரணமாக இந்த விபத்து நடைபெற்று இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர். மேலும் மின்துறை கவன குறைவு காரணமாக, மின்சார வயர்கள் கீழே தொங்கி இருந்ததா, என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.