சென்னையில் மேடவாக்கம் – வேளச்சேரி பிரதான சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில், அங்கு புதியதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் வாலிபர் ஒருவரும், இளம்பெண்ணும் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் பின்னால் கார் ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருந்தது.
தூக்கி வீசப்பட்ட இளம்பெண்:
அதிவேகமாக வந்த கார் முன்னால் சென்ற இவர்களின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் அந்த இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த இளம்பெண் மேம்பாலத்தில் இருந்து 30 அடி உயரத்திற்கு கீழே தூக்கி வீசப்பட்டார். மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த அந்த இளம்பெண் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே ரத்த வெள்ளத்தில் மயங்கினார்.
இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த இளைஞர் மேம்பாலத்திலே பலத்த காயத்துடன் மயங்கினார். இதையடுத்து, பாலத்தின் கீழே விழுந்த இளம்பெண்ணை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு பள்ளிக்கரணையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பாலத்தின் மேலே அடிபட்டு கிடந்த இளைஞரையும் குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அக்கா - தம்பி உயிரிழப்பு:
ஆனால், பள்ளிக்கரணையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்தனர். குரோம்பேட்டையில் அனுமதிக்கப்பட்ட அந்த வாலிபரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, போலீசார் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
போலீசார் விசாரணையில் விபத்தில் உயிரிழந்த இருவரும் அக்கா – தம்பி என்பது தெரியவந்தது. பல்லாவரத்தை அடுத்த பம்மல் எல்.ஐ.சி. காலனியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மகள் கலைச்செல்வி(26) – மகன் சந்தோஷ்குமார்(21). இவர்கள் இருவரும்தான் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். கலைச்செல்வியும், சந்தோஷ்குமாரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர்.
பரிதாபம்:
கலைச்செல்விக்கு திருமணமாகி தாம்பரம் அடுத்த சந்தோஷபுரத்தில் கணவர் சுரேந்தருடன் வசித்து வந்தார். இந்த நிலையில், சைதாப்பேட்டையில் வசிக்கும் அவர்களது பெரியப்பாவை பார்க்கச் சென்றுள்ளனர். அப்போதுதான் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். பெரியப்பாவை பார்க்க சென்ற அக்கா - தம்பி இருவரும் கார் மோதி விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாலைகளில் வாகனம் ஓட்டும்போது இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிவது நல்லது ஆகும். அதேபோல, நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிவதும் அவசியம் ஆகும். மிதவேகத்தில் வாகனத்தை ஓட்டுவதும் பாதுகாப்பானது ஆகும்.
மேலும் படிக்க:Crime: பிரபல ரவுடியுடன் துப்பாக்கி பயிற்சி மேற்கொண்ட வைரல் வீடியோ..! நெல்லை சட்டகல்லூரி மாணவர் அதிரடி கைது...!
மேலும் படிக்க: திருமணத்திற்காக சீர்காழி வந்த குடும்பம்.. தங்கி இருந்த விடுதி அறையில் மறைந்திருந்த சிசிடிவி.. பதறிபோன பெண்கள்!