செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்திற்கு முன்பாக கடந்த மாதம் 6 ஆம் தேதி அப்பு கார்த்தி என்பவர் நாட்டு வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையோடு நிறுத்தாமல், செங்கல்பட்டு மார்க்கெட் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வரும் சீனுவாசன் என்பவரது மகன் மகேஷையும்  அந்தக் கும்பல் கொன்றது. இருவரது உடல்களையும் மீட்ட செங்கல்பட்டு நகர காவல் துறையினர் உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

 

அதனை அடுத்து கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கும்பல் யார் கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அதுமட்டுமின்றி இரட்டை கொலையை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம கும்பல் குறித்து தகவல் கிடைத்துள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்தக் கும்பல் பயன்படுத்திய நாட்டு வெடிகுண்டுகளை வல்லுநர்கள் உதவியுடன் அப்புறப்படுத்தி, விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு மூன்று நபர்களையும் கைது செய்ய தனிப்படையும் அமைக்கப்பட்டது.



 

என்கவுண்டர் 

 

இந்நிலையில் இந்த இரட்டை கொலை தொடர்பாக ரவுடிகள் மொய்தீன் மற்றும் தினேஷ் ஆகியோர் மாமண்டூர் பாலாறு அருகே காவல் துறையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர்.  இதில் இரண்டு பேரும் உயிரிழந்தனர். மேலும் மாதவன் மற்றும் ஜெஸ்ஸிகா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.  அதேசமயம் ரவுடிகள் நடத்திய தாக்குதலில் காவல் துறையினர் இரண்டு பேரும் காயமடைந்துள்ளனர். குற்றவாளிகளைப் பிடிக்க சிறப்பு தனி படையிலிருந்த ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான காவல்துறையினர் குற்றவாளிகள் இருவரையும் சுட்டுக் கொலை செய்தார். 



 

ஆய்வாளருக்கு பாராட்டு

 

இதனை அடுத்து இரட்டை கொலை வழக்கில் சிறப்பாக செயல்பட்டு இருபத்தி நான்கு மணி நேரத்தில் குற்றவாளிகளை அடையாளம் கண்டு இருவரை என்கவுண்டரில் சுட்டுக் கொன்ற செங்கல்பட்டு காவல்துறையினருக்கு, பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் கலந்து கொண்டார். மேலும் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு வெகுமதியும் அளிக்கப்பட்டது. அந்தவகையில் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளர் ரவிக்குமாருக்கு காஞ்சிபுரம் சரக காவல் துணை கண்காணிப்பாளர் சத்யபிரியா 50 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.



 

ஏழை மாணவிக்கு உதவி

 

இந்நிலையில் திருக்கழுக்குன்றம் ஆய்வாளர் ரவிக்குமார் தனக்கு வெகுமதியாக வந்த ஐம்பதாயிரம் ரூபாயை,  செங்கல்பட்டு மாவட்டம் நெல்வாய் பகுதியை சேர்ந்த ஏழை மாணவியான யுவராணியின் படிப்புச் செலவிற்காக வழங்கினார். யுவராணி தனியார் மருத்துவக் கல்லூரியில் துணை மருத்துவப் படிப்பு படித்து வருகிறார். வெகுமதியை ஏழை மாணவிக்கு வழங்கிய காவலரின் செயல் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.