செங்கல்பட்டு மாவட்டம் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

 

ஆசிரியர் தினம்  ( Teachers Day ) 


ஒரு மனிதன் மிகச்சிறந்த மனிதனாக, மிகச்சிறந்த குடிமகனாக இருப்பதற்கு அவனது தந்தை, தாயின் பங்களிப்பை காட்டிலும் அவனை வழிகாட்டும் அவனது ஆசிரியரின் பங்களிப்பே மிக மிக முக்கிய காரணம் ஆகும். படிக்கும் மாணவனாக மட்டுமின்றி நாம் எந்த தொழில் செய்தாலும் நமக்கு சிறந்த குருநாதர் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த துறையில் நம்முடைய பயணம் சரியான இலக்கைச் சென்று அடையாது என்பதே உண்மை. அப்பேற்பட்ட ஆசிரியர்களை நாம் உண்மையாக மதித்தாலே நாம் சிறப்பானவர்களாக திகழ முடியும். அதற்கு பலரை நாம் உதாரணமாக கூறலாம். ஒவ்வொரு மனிதனுக்கும் கல்வி என்பது மிக அவசியம். அந்த கல்வியை அவனை பண்பட்ட மனிதனாக மாற்ற சிறந்த ஆசிரியர் அதை போதிக்க வேண்டியது மிக மிக அவசியம். சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியா இன்று இந்தளவிற்கு சிறந்திருப்பதற்கு ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது. அப்பேற்பட்ட ஆசிரியர்களின் மாண்பை போற்றும் விதமாக ஆசிரியராக இருந்து நாட்டின் முதல் குடிமகன் என்ற அந்தஸ்தை அடைந்த முதல் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5 நாடு முழுவதும் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளையே ஆசிரியர் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம். 





 

விஜய் மக்கள் இயக்கம் ( Vijay Makkal Iyakkam ) 

 

நடிகர் விஜய் தன்னுடைய பெயரில் மக்கள் இயக்கம் ஒன்றை செயல்படுத்தி வருகிறார். அதன் மூலம் ஏழை, எளியோருக்கு தங்களால் முடிந்த நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விஜய் தன்னுடைய மக்கள் இயக்கத்தை விரைவில் அரசியல் கட்சியாக மாற்றுவார் என்று கூறப்படுகிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.



 

வ. உ .சிதம்பரனார் மற்றும்   ராதாகிருஷ்ணன் பிறந்தநாள்

 

விஜயின் அரசியல் வருகை பேச்சுக்கள் அதிகமாகியுள்ள நிலையில் அவருடைய செயல்பாடுகளும் அதை உறுதிப்படுத்தும் விதமாகவே தொடர்ச்சியாக அமைந்திருக்கின்றன. அந்தவகையில், இன்று கப்பலோட்டிய தமிழன் வ. உ .சிதம்பரனார் மற்றும் முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மாவட்டந்தோரும் இருவரது திருவுருவ படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என நிர்வாகிகளுக்கு சுற்றறிக்கை விடப்பட்டு இருந்தது.



 

ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை

 

அதன்  ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகே இருவரது படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு அறிஞர் அண்ணா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும், வ.உ.சிதம்பரனார் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் படங்களை பள்ளி ஆசிரியர்களிடம் வழங்கினர்‌. இதில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் சூரிய நாராயணன் மற்றும் விஜய் மக்கள் இயக்க தொண்டரணி மாவட்ட தலைவர் எம்.எஸ் .பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.