செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேருந்து நிலையத்தில் இருந்த எம்ஜிஆர் சிலைக்கு , மர்ம நபர்கள் காவிதுண்டு அணிவித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 

செங்கல்பட்டு ( Chengalpattu News ) : செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேருந்து நிலையம் அருகே, முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் சிலை அமைந்துள்ளது. எம்ஜிஆர் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் அன்று எம்.ஜி.ஆர் சிலைக்கு, அதிமுகவினர் மரியாதை செலுத்துவது வழக்கம். 

 


எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் சாலை மறியல்


காவி துண்டுடன் இருந்த எம்ஜிஆர் சிலை

 

இந்தநிலையில் இன்று காலை எம்ஜிஆர் சிலைக்கு மர்ம நபர் காவிதுண்டு அணிவித்தும் கைவிரலில், காவி நிற துணியை கட்டிருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிமுகவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து,  அப்பகுதியில் அதிமுகவினர் கூட துவங்கியுள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த, விரைந்த திருப்போரூர் காவல்துறையினர் அதிமுகவினரை சமாதானம் படுத்த முயற்சி செய்தனர்.

 

 


எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் சாலை மறியல்


போராட்டத்தில் குதித்த அதிமுகவினர்

 

இந்த நிலையில் அதிமுகவின் ஒன்றிய செயலாளர் குமரவேல் தலைமையில் கூடிய அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. எம்ஜிஆர் சிலையை காவி துண்டு அணிவித்து அவமதித்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுகவினர் தங்கள் குடிகளை கையில் ஏந்தி கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை எடுத்து காவல்துறையினர் சமாதானம் செய்ததை அடுத்து அதிமுகவினர் அங்கு கலைந்து சென்றனர்.

 


அதிமுகவினரை சமாதானப்படுத்தும் போலீசார்


இந்த சம்பவம் குறித்து ஒன்றிய செயலாளர் குமரவேல் திருப்போரூர் காவல் நிலையத்தில் அதிமுக சார்பில் புகார் அளித்துள்ளார். திருப்போரூர் உதவி   ஆய்வாளரிடம்  அதிமுக ஒன்றிய செயலாளர் குமரவேல் கொடுத்துள்ள புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது :  திருப்போரூர் பேருந்து நிலையம் அருகே முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்     திருஉருவச்சிலை நிறுவப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது  .  இந்த நிலையில் நேற்று  யாரோ அடையாளம் தெரியாத சமூக விரோதிகள் எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு போர்த்தியும் கையில் காவி    கொடி கட்டியும்  களங்கம் ஏற்படுத்தி உள்ளனர்.  எனவே சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வேண்டுமென அவர் அளித்துள்ள புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு அணிவித்ததை அடுத்து திருப்போரூர் பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது. எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க எம்ஜிஆர் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 


சம்பவம் குறித்து ஒன்றிய செயலாளர் குமரவேல் திருப்போரூர் காவல் நிலையத்தில் அதிமுக சார்பில் புகார் அளித்துள்ளார்


 

 

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையிடம் தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது : சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், எம்ஜிஆர் சிலையில் இருந்த காவி துண்டு உள்ளிட்ட பொருட்கள் அகற்றப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்