திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சேவூர் ஊராட்சி சாணார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (70), விவசாயி. இவருடைய மனைவி காளியம்மாள் (60). இவர்களுக்கு மகன் வெங்கடேசன், மகள்கள் மீனா, மனோன்மணி, ரேகா, அஞ்சலா ஆகியோர் உள்ளனர்.


மேலும், காளியம்மாளுக்கு சகோதரி மட்டும் உள்ளார். அதே கிராமத்தில் காளியம்மாளின் தாய்க்குச் சொந்தமான 10 ஏக்கர் விவசாய நிலத்தில், 5 ஏக்கரை ஒரு மகளுக்கும், மீதமுள்ள 5 ஏக்கர், நிலம், வீடு உள்ளிட்டவற்றை காளியம்மாளின் மகன் வெங்கடேசன் பெயரிலும் கடந்த 1998-ம் ஆண்டு உயில் எழுதி வைத்துள்ளார்.


அதனைத் தொடர்ந்து, வெங்கடேசனுக்கு திருமணம் நடைபெற்ற பிறகு, ஒரு டிராக்டர் வாங்கி நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். மேலும், விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், டிராக்டருக்கு வாங்கிய கடனை செலுத்த முடியாதால், அவரது மாமியார் வீட்டிற்கு அவரது குடும்பத்துடன் சென்று வசித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.


 




மேலும், தனது பெயரில் இருந்த 5 ஏக்கர் சொத்தை, தந்தைக்கு தெரியாமல் வெங்கடேசன் தனது மகன் சேஷாத்திரி பெயரில் உயில் எழுதி, சொத்துக்கு கார்டியனாக அவரது மனைவி பெயரை போட்டு சொத்தை மாற்றி எழுதி வைத்துள்ளார். பின்னர், 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தனது சொந்த ஊரான சாணார்பாளைம் கிராமத்திற்கு தனது குடும்பத்துடன் வந்து தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.


வெங்கடேசன் சொத்தை மகன் பெயருக்கு உயில் எழுதி வைத்தது அவரது தந்தை பெருமாளுக்கு தெரிந்துள்ளது. இதனால், வெங்கடேசனிடம் உனது பாட்டி சொத்தை உன் அக்கா, தங்கைகளுக்குப் பிரித்து கொடுக்காமல் மொத்த சொத்தையும் உன் மகன் பெயரில் எப்படி எழுதி வைக்கலாம் என பெருமாள் கேட்டுள்ளார். சொத்துக்களை தனது மக்களுக்கு பாகம் பிரித்து கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார்.  இதனால், சில ஆண்டுகளாக தந்தைக்கும் மகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்துள்ளது 




 


இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு மே11-ம் தேதி மீண்டும் தந்தை மகனுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன் அன்று இரவு தூங்கிக் கொண்டிருந்த  தனது தந்தை முகத்தில் தலையணை வைத்து அழுத்தி, மூச்சை இறுக்கி  கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து ஆரணி தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு  பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர். இந்த வழக்கு ஆரணி கூடுதல் மாவட்ட அமர் நீதிபதி விஜயா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.


மேலும் வழக்கை விசாரித்த நீதிபதி விஜயா குற்றம் சாட்டப்பட்ட வெங்கடேசனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். பின்னர் ஆரணி தாலுக்கா காவல்துறையினர் வெங்கடேசனை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.