சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளின் பல இடங்களில் நேற்றைப் போலவே மீண்டும் விடிய விடிய மழை பெய்துள்ளது.
மழை சீசன் தொடங்கியது முதல் பெரிய அளவில் சென்னையில் மழை பெய்திராத நிலையில், கடந்த செப்.26ஆம் தேதி தொடங்கி ஆங்காங்கே சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வந்தது.
நுங்கம்பாக்கத்தில் கொட்டித் தீர்த்த மழை
அதன் உச்சகட்டமாக நேற்றைய தினம் (செப்.28) சென்னையில் நுங்கம்பாக்கம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளிலும், புறநகர் பகுதிகளான ஆவடி, பூவிருந்தவல்லி உள்ளிட்ட பகுதிகளிலும் திடீர் கன மழை கொட்டித் தீர்த்தது.
இடி மின்னலுடன் பெய்த கனமழையாலும், தாழ்வான பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீராலும் பொது மக்கள் வீடுகள் முடித்து அலுவலகம் திரும்ப பெரும் அவதிக்குள்ளாகினர்.
குடியிருப்பில் விழுந்த இடி
மேலும் தேனாம்பேட்டை நகர்ப்புற மேம்பாட்டு வாரியக் குடியிருப்பின்மீது இடி விழுந்ததில் குடியிருப்பின் 9ஆவது மாடி பகுதியில் சிறிய பகுதி பெயர்ந்து விழுந்தது. எனினும் நல்வாய்ப்பாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
சென்னையின் பல இடங்களிலும் மழைநீர் வடிகால் பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில், மழை நீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. சென்னையின் பிரதான சாலைகளில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து குளம் போல் காட்சியளித்தது.
பிற மாவட்டங்களில் மழை
சென்னை தவிர திருவள்ளூர், திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதிகள், புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகள், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் நல்ல மழை பெய்தது.
சென்னையைப் போலவே நாகை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்துள்ளது.
இன்றும் கனமழை தொடருமா?
இந்நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்றும் இடி, மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் முன்னதாகத் தெரிவித்துள்ளது.