செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்த வருடம் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தாலும் தண்ணீர் பஞ்சம் வராமல் பார்த்துக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


சென்னை  ( Chennai ) புறநகர் பகுதியான செங்கல்பட்டு மாவட்டம்


செங்கல்பட்டு (Chengalpattu News): அதிகளவு மக்கள் தொகை, கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் ஆகியவை செயல்படும் மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் இருந்து வருகிறது. இதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில், அதிகளவு குடியிருப்புகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக பெரிய அளவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினைகள் இல்லாமல் இருந்து வந்தது. இதற்கு முக்கிய காரணமாக அதற்கு முன்னால் பருவமழை காலங்களிலும், அது மட்டும் இல்லாமல் அவ்வப்பொழுதும் மழை பெய்து வந்ததால் குளம் ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளில் தொடர்ந்து தண்ணீர் இருந்து வந்தது. அதேபோன்று முக்கிய நீர் ஆதாரமாக இருக்கக்கூடிய பாலாற்றிலும் வரலாறு காணாத வெள்ளம் கடந்த வருடம் சென்றது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டமானது இயல்பை விட சற்று அதிகரித்து இருந்தது. 




கடந்த வருடத்தை விட குறைந்த நீர் மட்டம் ( Ground Water level )

 

நீர்மட்டம் அதிக அளவு இருந்ததால் கோடைகாலத்திலும் கோடைக்கு பிற்பகுதி காலகட்டத்திலும் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் பொதுமக்கள் இருந்து வந்தனர். ஆனால் இம்முறை குறைந்த அளவு மழை பெய்ததால், நீர் நிலைகளில் தண்ணீர் அதிகளவு இருப்பு குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம், நிலத்தடி நீர்மட்டத்தின் அளவு 2.89 மீட்டராக இருந்து வந்த நிலையில் இந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் நிலத்தடி நீர்மட்டத்தின் அளவானது 3.57 ஆக குறைந்துள்ளது. 0.68 மீட்டர் நிலத்தடி நீர்மட்டத்தின் அளவு குறைந்துள்ளது.



 

இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் அளவு குறைந்துள்ளதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதால் உடனடியாக இதுகுறித்து அதிகாரிகள் கவனத்தில் கொண்டு குடிநீர் பிரச்சனை இல்லாமல் மக்களுக்கு வருங்காலத்தில் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது.