சுமார் 7 அடி நீள பாம்பை

 

செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட, மேம்பாலம் அருகே டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இங்கு சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தோளில் சுமார் 7 அடி நீள பாம்பை சுற்றியபடி வந்தார். இதனை கண்டு மதுவாங்க வரிசையில் நின்ற குடிமகன்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அந்த முதியவர் லாவகமாக அந்த பாம்பை கையாண்டார். அவரது சொல்லுக்கு கட்டுப்பட்டு, அந்த பாம்பும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல், அவரது தோளில் நெளிந்து கொண்டு இருந்தது.

 

நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி

 

இதனை கண்டு அவ்வழியே வாகனத்தில் சென்றவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். அவர்கள் வாகனத்தை நிறுத்தி முதியவர் பாம்புடன் நிற்கும் காட்சியை கண்டு அதிர்ச்சியுடன் வச்ச கண்ணை வாங்காமல் பார்த்து வந்தனர். சிலர் இதனை தங்களது செல்போனிலும் வீடியோவாக எடுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து அந்த பாம்பை அந்த முதியவர் தனது லுங்கிக்குள் போட்டு மடித்து கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.



 

சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது

 

பின்னர், அவர் அந்த  பாம்பை அருகில் உள்ள புலிப்பாக்கம் ஏரிக்கரையில் உள்ள புதரில் விட்டு அங்கிருந்து சென்று விட்டார். பாம்புடன் விளையாட்டு காட்டியவர் பரனூர் பகுதியை சேர்ந்த சங்கர் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் வந்தபோது சாலையின் குறுக்கே, இந்த பாம்பு ஊர்ந்து சென்றது. வாகனத்தில் அடிபட்டு இறந்துவிடக்கூடாது என்பதால் அதனை பிடித்து மீண்டும் வனப்பகுதியில் விட்டேன்” என்றார். பாம்புடன் வைத்து அட்ராசிட்டி செய்யும் முதியோரின் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.