இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்திலும், நடிகர் சூர்யா நடிப்பிலும் தயாரிப்பிலும் சமீபத்தில் வெளியானது `ஜெய்பீம்’ திரைப்படம். அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியான இந்தத் திரைப்படம் தமிழ்நாட்டில் வாழும் இருளர் பழங்குடியினர் மீதான காவல்துறையினரின் அடக்குமுறை குறித்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் படத்தில் காட்டப்பட்டிருந்த காவல்துறை அதிகாரியின் வீட்டில் வன்னியர்களின் சாதிச் சின்னம் இருந்ததாக சர்ச்சைகள் எழுந்தது. அதனையடுத்து படத்தின் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் அந்தக் காட்சியில் சர்ச்சைக்குரிய அந்தப் பகுதிகளை மாற்றியதாக அறிவித்தார். எனினும் வன்னியர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தியதாக பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ், வன்னியர் சங்கம் முதலான அமைப்புகள் நடிகர் சூர்யா நஷ்ட ஈடு அளிக்க வேண்டும் என `ஜெய் பீம்’ படத்தையும், நடிகர் சூர்யாவையும் கடுமையாக எதிர்த்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் முன்வைத்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாகக் கடிதம் ஒன்றை வெளியிட்டார். மேலும், `ஜெய் பீம்’ படத்திற்கு ஆதரவு அளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதலானோருக்கு நன்றி தெரிவித்தும் கடிதம் எழுதினார் நடிகர் சூர்யா.
அதனைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா மீதான சர்ச்சைகளில் அவருடன் நிற்பதாகத் திரைப் பிரபலங்களான இயக்குநர் பா.ரஞ்சித், இயக்குநர் பாரதி ராஜா, இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், சத்யராஜ், டிராஜேந்தர், அமீர் உள்ளிட்ட பலர் தங்களது ஆதரவு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அதேபோல் சமூக வலைத்தளத்திலும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அருங்குணம் ஊராட்சியில் இன்று சிறப்பு கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் யோகேஷ்பாபு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் 9 பேரும் கலந்துகொண்டனர். ஜெய்பீம் படத்தின் இயக்குனர் படகுழுவினர்க்கு நன்றி தெரிவித்தும், மிரட்டல் விடுவத்தவர்கள் மீது எந்த பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஊராட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பார்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் அனைத்து பழங்குடி மக்கள் பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும், இப்படத்தை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களும் இலவசமாக காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது .