சென்னை வியாசர்பாடி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் விஜி (32) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் இரவு வேலை முடிந்து வியாசர்பாடி சர்மா நகர் கோல்டன் காம்ப்ளக்ஸ் வழியாகச் செல்லும் போது முழு மதுபோதையில் இருந்த 3 பேர் விஜியை  மடக்கி மது அருந்த பணம் கேட்டுள்ளனர். விஜி பணம் தர மறுக்கவே அருகில் இருந்த உருட்டு கட்டையை எடுத்து விஜியை சரமாரியாக தாக்கியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து விஜியை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விஜி எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.



 

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த எம்.கே.பி நகர் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் முல்லை நகர் சுடுகாடு அருகே பதுங்கி இருந்த வியாசர்பாடி முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த ரசூல் கான் (20) மற்றும் வியாசர்பாடி தாமோதரன் நகர் பகுதியைச் சேர்ந்த 14 வயது மற்றும் 17 வயது இரண்டு சிறுவர்கள் என மூன்று பேரை கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் மது குடிக்க பணம் கேட்டு விஜியை தாக்கியது விசாரணையில் தெரிய வந்தது. இதனை அடுத்து ரசூல் கான் மீது வழக்குப்பதிவு செய்த எம்.கே.பி நகர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்றவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

 



 

சென்னையில் பல்வேறு இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி கொடுங்கையூரில் கைது

 

சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த சுகன்யா (28) கடந்த ஒன்றாம் தேதி மருத்துவமனைக்கு சென்று வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் சுகன்யா அணிந்திருந்த தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றனர். இது குறித்து சுகன்யா கொடுங்கையூர் காவல் நிலையத்தில் குற்றப் பிரிவில் புகார் அளித்தார். புகாரின் பேரில்  கொடுங்கையூர்  போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த  சிசிடிவி கேமரா பதிகளை ஆய்வு செய்து இரண்டு பேரின் புகைப்படங்களை எடுத்தனர். அதனை தாலிச்சங்கிலியை பறிகொடுத்த சுகன்யாவிடம் அடையாளம் காட்டி செயின் பறிப்பில்  ஈடுபட்டவர்கள் இவர்கள் தான் என்பதை உறுதி செய்தனர். 

 



 

போலீசாரின் விசாரணையில்  திருவொற்றியூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ராசையா (24) மற்றும் பிரித்திவிராஜ் (21) என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து கொடுங்கையூர் குப்பைமேடு அருகே வாகன சோதனையில் ராசாவை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடமிருந்து 8 சவரன் தங்கச் செயின் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது அவரிடம் நடத்திய விசாரணையில் செயின் பறிப்பின் போது உடன் இருந்த பிரித்திவி ராஜ் தற்பொழுது மற்றொரு வழக்கில்  மணலி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதாக தெரிவித்துள்ளான். இதனையடுத்து கைது செய்யப்பட்ட ராசய்யா மீது வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.