செம்பரம்பாக்கம் ஏரி ( chembarambakkam lake )


சென்னையின் குடிநீர் ஆதாரத்திற்கு மிக முக்கிய ஏரிகளில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி திகழ்ந்து வருகிறது. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீர் சென்னை மாவட்டத்தில், பாய்கின்ற அடையாறு ஆற்றில் கலப்பதாலும் செம்பரம்பாக்கம் ஏரி முக்கியமாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பல்வேறு ஏரிகளில் இருந்து மழை காரணமாக தண்ணீர் வருவது வழக்கம். கடந்த சில நாட்களாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து ஆனது மழையைப் பொறுத்து மாறுதல் அடைந்து வருகிறது


செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் ( chembarambakkam lake level )


செம்பரபாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 37.20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி, தற்பொழுது நீர் இருப்பு 22.19 அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 3.645 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். தற்பொழுது தண்ணீரின் அளவு 3.170 டிஎம்சி ஆக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து ஆனது 162 கன அடியாக உள்ளது.


செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றப்படும் அளவு 164 கன அடியாக உள்ளது (குடிநீருக்காக 105  கன அடி நீர், சிப்காட் தேவைக்காக 04  கனஅடி நீர், 25 கனஅடி நீர வெளியேற்றப்படுகிறது, பிற காரணங்களுக்காக 31 கன அடி நீர்). தொடர்ந்து அதிகாரிகள் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.


காஞ்சி, செங்கை மாவட்ட ஏரிகள் :


காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 41 ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 528 ஏரிகளில் 58 ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 ஏரிகளில் 5 ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட 93 ஏரிகளில் 7 ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் ஏரிகள் மிக வேகமாக நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மழைஎச்சரிக்கை:


கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


27.11.2023: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


28.11.2023 முதல் 02.12.2023 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 


சென்னையில் மழைக்கான வாய்ப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  லேசான /  மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும். 


மீனவர்களுக்கான எச்சரிக்கை:  


வங்க கடல் பகுதிகள்:


27.11.2023: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில்  சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.



28.11.2023: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகள்,  தென்கிழக்கு  வங்கக்கடல் பகுதிகளில்  சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.