Chennai Metro Train: இன்று முதல் ஒவ்வொரு 7 நிமிட இடைவெளிக்கும் ஒருமுறை, ரயில் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
மெட்ரோ அறிவிப்பு:
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிவிப்பில், “சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், அதிகரித்து வரும் மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மற்றும் அவர்களின் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காகவும், இரண்டு வழித்தடங்களிலும் நெரிசல் மிகு நேரங்கள் இல்லாது மற்ற நேரங்களில் 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள் வருகின்ற 27.11.2023 (திங்கட்கிழமை) முதல் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். மெட்ரோ ரயில் பயணிகள் இச வையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதனடிப்படிப்படையில், இன்று முதல் ஒவ்வொரு 7 நிமிட இடைவெளிக்கும் ரயிலை இயக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
அதிகரிக்கும் பயணிகள் கூட்டம்:
மெட்ரோ ரயில் சேவை சென்னையில் தொடங்கியபோது, அதன் பயன்பாடு என்பது பொதுமக்களிடையே குறைவாகவே இருந்தது. ஆனால், தற்போது ஒவ்வொரு நாளும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதோடு, மாத பயனாளர்களின் எண்ணிக்கையும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்நிலையில், மழைக்காலம் தொடங்கியுள்ளதால், போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்வதை தவிர்க்கவும், தாமதமின்றி பள்ளி, கல்லூரிகள் மற்றும் பணிக்கு செல்வதற்கும் பொதுமக்கள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில் தான், நெரிசல் மிகு நேரங்கள் இல்லாது மற்ற நேரங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு மாற்றாக 7 நிமிட இடைவெளியில் ரயில்களை இயக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதோடு, பயணிகளின் வசதிக்காக, மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதல் நகரும் படிக்கட்டுகள், மின் தூக்கி வசதி மற்றும் இணைப்பு வாகன வசதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
சென்னை மெட்ரோ ரயில் சேவை:
சென்னையில் நிலவும் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூரை அடையும் வகையில் ஒரு வழித்தடம் உள்ளது. அதேபோல் சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக மறு வழித்தடமும் உள்ளது. மற்ற வழித்தடங்களுக்கான கட்டுமான பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே, மக்கள் அதிக அளவில் மெட்ரோவை பயன்படுத்துவதற்கான பல்வேறு சலுகைகளையும் மெட்ரோ நிர்வாகம் வழங்கி வருகிறது. குறிப்பாக, பயண அட்டை, கியூ ஆர் கோடு, வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதிகள் அறிமுகப்படுத்தி உள்ளது. சமீபத்தில் கூட, பேடிஎம், போன்பே ஆப்பில் டிக்கெட் எடுக்கும் வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடித்தள நாளை முன்னிட்டு, டிசம்பர் 3ஆம் தேதி மட்டும் மெட்ரோ ரயிலில் ரூ.5 கட்டணத்தில் பயணம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.