மீனவ சமுதாயத்தை அவமதிக்கும் வகையில் யானை திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறி, அதன் தணிக்கை சான்றிதழை ரத்து செய்யக் கோரிய வழக்கை ஆகஸ்ட் மாதத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
 
நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான யானை திரைப்படத்துக்கு எதிராக சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தமிழ்நாடு மீனவர் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஜோபாய் கோமஸ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், யானை திரைப்படத்தில் ராமநாதபுரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதி மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை சமூக விரோதிகளாக காட்டியுள்ளதாகவும், மீனவர்களை கூலிப்படையினராகவும், குழந்தைகளை தவறாக பயன்படுத்துபவர்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
சில காட்சிகள் மத உணர்வை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், கச்சத்தீவு பிரச்னையும் இந்த படத்தில் கையாளப்பட்டுள்ளதாகவும், அந்த விதம் தங்கள் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். உயிரை பணயம் வைத்து நடுக்கடலில் மீன் பிடித்து, ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணி ஈட்டித்தரும் விளிம்புநிலை மக்களான மீனவர்களை அவமதிக்கும் வகையில் உள்ள காட்சிகளுடன் படத்தை தொடர்ந்து திரையிட தடை விதிக்க வேண்டும் எனவும், படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
இந்த மனு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் காணொலி காட்சி மூலம் ஆஜராவதில் இடையூறு ஏற்பட்டதால், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
 

 
தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு கோப்புக்கு எடுக்கப்படாமல் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் எண்ணிக்கையை சமர்ப்பிக்கும்படி, அனைத்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிகளுக்கும், தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
குற்ற வழக்கு ஒன்றில் விசாரணையை முடித்து இறுதி அறிக்கையை விரைந்து தாக்கல் செய்யும்படி கிருஷ்ணகிரி போலீசாருக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2020ம் ஆண்டே அந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செயயப்பட்டு விட்டதாகவும், ஆனால் அது கோப்புக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை எனவும் தெரிவித்தார். ஆனால், குற்றப்பத்திரிகை நகலை வழங்கக் கோரி விண்ணப்பித்த போது, எந்த அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை என அந்த மனுவை கீழமை நீதிமன்றம் திருப்பி அனுப்பி விட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இதே குற்றச்சாட்டுடன் பல மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதாகச் சுட்டிக்காட்டிய நீதிபதி, இதை தவிர்க்க, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த தேதி, நேரம் ஆகியவற்றை நீதிமன்ற ஊழியர்கள் குறிப்பிட வேண்டும் என உத்தரவிட்டார். பின்னர், தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு கோப்புக்கு எடுக்கப்படாமல் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் எண்ணிக்கையை சமர்ப்பிக்கும்படி, அனைத்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிகளுக்கும், தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களுக்கும் உத்தரவிட்டார்.

அதேபோல,  நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, கோப்புக்கு எடுக்கப்படாத குற்ற வழக்குகளின் எண்ணிக்கையை தெரிவிக்க வேண்டும் என, தமிழக டி.ஜி.பி.க்கும் உத்தரவிட்ட நீதிபதி சதீஷ்குமார், இந்த இரு அறிக்கைகளையும் ஆகஸ்ட் 16 ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண