பல்வேறு ஊர்களில் வளம் வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி மாமல்லபுரம் வந்தடைந்தது. 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நாளை தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனையொட்டி ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் நடைபெற்றது. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி மாமல்லபுரம் வந்தடைந்தது. இதனை அமைச்சர் மெய்யநாதன் பெற்றுக்கொண்டார்.


 



அப்போது மேளதாளங்கள் முழங்கவும், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் ஜோதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை அடுத்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் ராட்சஸ பலூன்களை பறக்க விட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். செஸ் போர்டு வடிவில் அமைக்கப்பட்டிருந்த கேக் வெட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த வந்திருந்த பொதுமக்களுக்கு வழங்கினார்.




 

அதேபோல, இந்த ஊர்வலத்தில் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் கடற்படை சார்பில் வீரர்கள் பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில், 74 வது நகரமாக செஸ் ஒலிம்பியாட் ஜோதியானது மகாபலிபுரத்தை வந்தடைந்துள்ளது. இந்தியா முழுவதும் எழுபத்தி நான்கு நகரங்களில் சுற்றிய பிறகு இன்று மகாபலிபுரம் வந்தடைந்துள்ளது. இதனையடுத்து இன்று சென்னைக்கு செல்கிறது, அங்கு தமிழக முதலமைச்சர்  செஸ் ஒலிம்பியாட் ஜோதியை பெற்றுக் கொள்கிறார் என தெரிவித்தார்.


செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் சென்னையில் இன்று மாலை 4 மணி முதல் 9 மணி வரை நடைபெறுகிறது. மாநில கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இருந்து ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கு வரை ஜோதி ஓட்டம் நடைபெறவிருக்கிறது. காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, கொடிமர சாலை, அண்ணா சாலை, பல்லவன் சாலை, சென்ட்ரல் சதுக்கம், ஈவேரா சாலை, ராஜா முத்தையா சாலை வழியாக ஜோதி ஓட்டம் நடைபெற இருப்பதால் ஒரு சில சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

 

பிரதமர் மோடி புகைப்படம்

 

பேனர்களில் மோடியின் புகைப்படம் பயன்படுத்தப்படவில்லை குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில் இன்று மகாபலிபுரத்தில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி,  முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்  ஆகிய இருவரின் புகைப்படமும் பயன்படுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.