அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்க கூடாது என உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டம் களத்துப்பட்டியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ். சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுக கட்சியில் நிறுவனர் எம்.ஜி.ஆர்., பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கிய விதிகளுக்கு முரணாக ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இரட்டை தலைமை முறையை ஒழித்துவிட்டு, ஒற்றை தலைமையை உருவாக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 

இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி கட்சியில் கட்சி முடிவுகளை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அதில் இடைக்காலக் கோரிக்கை வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்நிலையில் அந்த வழக்கில் இறுதி முடிவெடுக்கும் வரை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாக எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது என்றும், அவரை தேர்ந்தெடுக்கும் வகையில் ஜூலை 11ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட (3,4,5,6,7) தீர்மானங்களை ஏற்கக் கூடாது என்றும் உத்தரவிடவும் கோரிக்கை வைத்துள்ளார்.

 

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி, நீதிபதி சுந்தர்மோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது எடப்பாடி பழனிச்சாமி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய்நாரயண், உள்கட்சி விவகாரங்களில்  தலையிட முடியாது என்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு  நகலை சமர்பித்தார்.

 

மனுதாரர் ஆஜராகி ஏற்கனவே இதே அமர்வு பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளதால் வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.மேலும் எடப்பாடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட தீர்ப்பு  நகலை படித்துபார்க்க அவகாசம் வேண்டும் என கேட்டுக்கொண்டார்.இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் இரண்டு வாரம் ஒத்திவைத்தனர்.


 





 




பார்வை மாற்றுத் திறனாளிகள் எந்தவித கஷ்டமும் இல்லாமல் அரசின் மாதாந்திர உதவித்தொகை திட்ட பலன்களை பெறுவதை  உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


தமிழகத்தில் பிற மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக 1,500 ரூபாய் வழங்கப்படும் நிலையில், பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு 1000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாக கூறி, பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கும் பாரபட்சமின்றி ஓய்வூதியம் வழங்கக் கோரி நேத்ரோதயா என்ற அமைப்பு கடந்த 2018ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தது.


அந்த மனுவில், மற்ற மாற்தித் திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயல்படுத்தி வருவதாகவும், பார்வை மாற்துத் திறனாளிகளுக்கான உதவித்தொகை திட்டத்தை சமூக நலத்துறை செயல்படுத்துவதால் பல்வேறு இன்னல்களை  சந்திப்பதால், பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்களையும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரப்பட்டது.


இந்த வழக்கில், பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு உதவிகளை பட்டியலிட்ட தமிழக அரசு, பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு பொது வேலை வாய்ப்பில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுவதாக விளக்கமளித்தது.


பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகைகள் மத்திய அரசு திட்டம் மூலம் வழங்கப்படுவதால் சமூக நலத்துறை மூலம் இத்திட்டங்கள் அமல்படுத்தப்படுவதாகவும், பார்வை மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட சலுகைகளை பெற மாவட்டம் தோறும் வருவாய் கோட்டாட்சியர்கள் அதிகாரிகளாக நியமித்து, பார்வை மாற்றுத் திறனாளிகளின் தனிப்பட்ட குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என அரசுத்தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.


இந்த உத்தரவாதத்தை பதிவு செய்த பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வு, அரசின் உத்தரவாதத்தின் அடிப்படையில் பார்வை மாற்றுத் திறனாளிகள், எந்தவித கஷ்டமும் இல்லாமல்  உதவித்தொகை உள்ளிட்ட சலுகைகள் பெறுவதை உறுதி செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.


மேலும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையுடன், வேலையில்லா பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு, அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ப 600 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படுவதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அரசு மற்றும் தனியாரில் வேலைவாய்ப்பு பெறும் தகுதி பெற்ற பார்வை மாற்றுத் திறனாளிகளை மற்ற பிரிவு மாற்துத் திறனாளிகளுடன் ஒப்பிட முடியாது என்ற போதும், உடல் நலம் பாதிக்கப்பட்ட, வயதான பார்வை மாற்றுத் திறனாளிகளை, மற்ற பிரிவினருக்கு இணையாக  கருதுவது குறித்து அரசு பரிசீலிக்கலாம் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.