மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தினை ஒட்டி,  காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த பேரணியை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தார்.

 

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ( breast cancer awareness )

 

வருடம்தோறும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த மாதம் முழுவதும் மார்பக புற்றுநோய் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

 

மார்பகப் புற்றுநோய் எளிதில் குணப்படுத்தக் கூடிய நோய்தான். ஆரம்ப காலங்களில் சுய பரிசோதனை மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டால் விரைவில் குணமடைய செய்யும் வகையில் தற்போது நவீன மருத்துவ வசதிகள் வந்துள்ளன.

 


மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பதாகை


 

அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் ( arignar anna cancer hospital kanchipuram )

 

கடந்த ஆண்டில் ஒன்பதாயிரம் இறப்புகளுடன் ஒரு லட்சத்து 78,000 நபர்களுக்கு மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ள நிலையில், எட்டு நிமிடங்களுக்கு ஒரு பெண் மார்பக புற்றுநோயால் இறப்பதும், ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கும் ஒரு பெண் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாவதையும் முற்றிலும் அகற்றும் வகையில்,  பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.

 

 


புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த பேரணியை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தொடங்கி வைத்தார்.


 

அவ்வகையில் காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் இன்று மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செவிலியர் கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தார்.

 

" விதியை வெல்லலாம் "

 

இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில், ’விழிப்புடன் இருந்தால் விதியை வெல்லலாம்’, ’பெண்கள் அனைவரும் சுய பரிசோதனை மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்’, ’ஆரம்ப காலத்தில் கண்டறியப்பட்டால் எளிதில் குணப்படுத்தும் வகையில் சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது’ என்று உள்ளிட்ட பதாகைகளில் ஏந்தி விழிப்புணர்வு  ஏற்படுத்தினர்.



 

 

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் , குறிப்பாக பெண்கள் அனைவரும் உடல் நலம் குறித்து அக்கறை கொள்ளாமல் உள்ளது வருத்தமளிப்பதாகவும், ஆரம்ப நிலைகளில் எவ்வித நோய்களையும் கண்டுபிடித்தால் அதிலிருந்து விடுபடலாம் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் தற்போதைய காலகட்டத்தில் வாழ்வியல் முறைகளை தேர்வு செய்து அதன்படி நடந்து கொண்டால், நோய்கள் இன்றி வாழலாம் எனவும் கேட்டுக் கொண்டார்.

 

கலந்துகொண்ட மருத்துவர்கள்

 

இதனைத் தொடர்ந்து சாய் தொண்டு நிறுவனம் சார்பில், சிகிச்சை பெறும் நபர்களுக்கு செயற்கை மார்பக அவையங்கள் இலவசமாக அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் டாக்டர் சரவணன் நிலைய மருத்துவர் டாக்டர் சிவகாமி புற்றுநோய் மற்றும் கதிரியக்கத்துறை தலைவர் டாக்டர் சீனிவாசன் புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை மருத்துவர் பிரசன்ன சீனிவாச ராவ் மற்றும்  மருத்துவர்கள், செவிலியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.