ஆட்கொல்லியாக மாறுவதற்கான காரணங்கள்
புலி அவ்வளவு எளிதில் ஆட்கொல்லியாக மாறி விடாது என சூழலியல் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். புலிகள் ஆட்கொல்லியாக மாறுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாக புலிகள் வேட்டையாடும் தன்மை குறையும்போது, கிராமங்களில் உள்ள வளர்ப்பு பிராணிகளை தாக்கி உண்ணத் துவங்கும். அத்தகைய சமயங்களில் எதேச்சையாக மனிதர்களை புலி வேட்டையாடி உண்டால், ஆட்கொல்லியாக மாற வாய்ப்புள்ளது. ஏனெனில் மனிதர்களை புலிகள் வேட்டையாடுவது மிகவும் எளிதானது. மனித வேட்டைக்கு பழகிய புலிகள் ஆட்கொல்லியாக மாறும் என்கின்றனர், சூழலியல் செயற்பாட்டாளர்கள்.
இது குறித்து சூழலியல் செயற்பாட்டாளர் ராமமூர்த்தி கூறுகையில், “கூடலூர் புலியை சுட்டுக்கொல்ல முடிவு எடுத்திருப்பது மிகவும் வருத்தமானது. மக்கள் ஒத்துழைப்பு இன்றி புலிகளை காப்பாற்ற முடியாது. ‘மேன் ஈட்டர்’களை காடுகளில் வைத்திருப்பது பிரச்சனைதான். இதனை சுட்டுக் கொல்வதை தவிர வேறு வழியில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை. புலி, சிறுத்தை மனிதர்களை கண்டால் விலகிச்செல்லும் தன்மை கொண்டது. அவ்வளவு சீக்கிரம் மனிதர்களை வேட்டையாடாது.
புலிகள் ஆட்கொல்லியாக மாறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. வயது முதிர்வு, உடல் ரீதியாக பாதிப்பு, நோய் தொற்று, இயலாமை, கண் பார்வை குறைவு, இளவயதில் அடிபடுதல், எல்லைகளுக்காவோ மற்ற விலங்குகளுடனோ சண்டையிட்டு காயமடைதல் உள்ளிட்ட காரணங்களால் வேட்டைத் திறன் குறையும். இரையை தேடும் வலிமை இழக்கும். அத்தகைய நிலையில் கிராமங்களில் உள்ள கால்நடை தாக்கி உண்ணும். எதேச்சையாக மனிதனை தாக்க நேரிடும். புலிகளுக்கு மனிதனை வேட்டையாடுவது தான் மிகவும் எளிமையானது. தாய்ப்புலி ஆட்கொல்லியாக இருந்தால், குட்டிகளும் ஆட்கொல்லியாக மாற வாய்ப்புள்ளது. பூங்காக்களிலும் ஆட்கொல்லி புலிகளை பராமரிப்பதில் சிக்கல் உள்ளது. சிலர் புலியை சுட்டுக்கொல்லக் கூடாது என உணர்ச்சிப்பூர்வமாக சொன்னாலும், வேறு வழியில்லை என்பதே எதார்த்தம்.