மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் ஓராண்டை கடந்த நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் முழு அடைப்பையும் போராட்டத்தையும் நடத்த 19 எதிர்க்கட்சிகள் முடிவெடுத்து இன்றைக்கு நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி மற்றும் பிற நிறுவனங்கள், கடைகள், தொழில்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அன்றாட பணிகளை விடுத்து இதற்கு ஒத்துழைப்பு தர எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.

 


 

விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லி மற்றும் பிற இடங்களில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் திமுக நிற்கிறது என திமுகவின் மாநில விவசாய பிரிவு தலைவர் என்.கே.கே.பெரியசாமி கூறினார். மேலும் மத்திய அரசு எதேச்சதிகாரமாக செயல்படுகிறது, விவசாயிகளை ஒருபோதும் கவனிக்கவில்லை. தமிழக விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பொது மக்கள், வணிகர்கள் மற்றும் அனைத்து சமூக அமைப்புகளும் இந்த பந்த்-ல் பங்கேற்று முழுமையான வெற்றியை பெற வேண்டும், என்று அவர் கேட்டுக் கொண்டார்.

 



அதன் அடிப்படையில் கடலூரில் இன்று போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன அதன்படி கடலூரில் இன்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன மேலும் 80 சதவிகித பேருந்துகள் இயங்கி வருகின்றன, அதுமட்டுமின்றி பல்வேறு இடங்களில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றது அதில், கடலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா பாலத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான  விசிக, தவாக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் சார்பில் சாலை மறியல் நடைபெற்றது அதில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் என 100 கணக்கானோர் கலந்து கொண்டனர்.

 



 

அப்பொழுது மத்திய அரசின் கொண்டு வந்த வேளாண் சட்டங்களை கண்டித்தும் பெட்ரோல் டீசல் விலையேற்றத்திற்கு காரணமான மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பட்டன பின் சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் துறை கைது செய்தது அப்பொழுது கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.அய்யப்பன் கைது செய்ப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார். அண்ணா பாலத்தில் நடந்த இந்த சாலை மறியல் போராட்டத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.