காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்காடு கிராமத்தில் 350 குடும்பங்கள் என 1800 பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அக்கிராமத்தில் ஒரே தெருவில் 8 பேருக்கு அடுத்தடுத்து சிறுநீரக கோளாறு  ஏற்பட்டுள்ளது. முழுமையாக 7 நபர்களுக்கும் சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு தற்போது செயல் இழந்துள்ளது. இதன் காரணமாக அனைவரும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக சிறுநீரகம் செயல் எழுந்தவர்கள், வாரம் இருமுறை அனைவரும் டயாலிசிஸ் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

 



இந்நிலையில் சிறுநீரகம் செயலிழந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். ஒரே பகுதியைச் சேர்ந்த நான்கு நபர்கள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதை பார்த்த மருத்துவமனை நிர்வாகம் அவர்களிடம் காரணம் குறித்து விசாரித்துள்ளனர். இதில் அதே பகுதியை சேர்ந்த ஏழு நபர்களுக்கு சிறுநீரகம் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து செங்காடு பகுதியில் ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்தனர்.



இதனையடுத்து இன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் தலைமையில் 37 மருத்துவர்கள் உட்பட 62 பேர் கொண்ட குழு வீடு வீடாக சென்று அனைவருக்கும் உடல் எடை, உயர் ரத்த அழுத்தம், ரத்த பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை என ஆய்வு நடத்தி வருகின்றனர். மேலும் செங்காடு கிராமத்தில் நிலத்தடி நீரையும் ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. செங்காடு கிராமத்தில் உள்ள 30 வயதிற்கு மேற்பட்ட  350 குடும்ப உறுப்பினர்களுக்கும் ரத்த பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.



இதுகுறித்து சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட சிவகாமி கூறுகையில், எங்கள்  தெருவில் ஏழு நபர்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு, தற்போது டயாலிசிஸ் செய்து வருகிறோம். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது டயாலிசிஸ் செய்து சிகிச்சை பெற்று வருகிறோம். இதுவரை 5-க்கும் மேற்பட்டோர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். சிறுநீரக பிரச்சனை வருவதற்கு காரணம் என்னவென்று எங்களுக்கு புரியவில்லை. தற்போது தான் மருத்துவர்கள் எங்கள் ஊரில் உள்ள அனைவருக்கும் பரிசோதனையை மேற்கொள்கிறார்கள். அரசு எங்கள் ஊர் பொது மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.



 

இதுகுறித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் கூறுகையில், ஒரே பகுதியைச் சேர்ந்த நான்கு நபர்களுக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டு இருப்பது குறித்த தகவல் கடந்த மாதம் எனக்கு கிடைத்தது. உடனடியாக கடந்த மாதமும் இவ்வூரில் மருத்துவ முகாம் அமைத்து பரிசோதனை மேற்கொண்டோம். இதனைத்  தொடர்ந்து இன்று 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் சிறுநீரக பரிசோதனை மேற்கொள்வதற்காக இரத்த மாதிரிகளை, எடுத்துள்ளோம் . சிறுநீரக கோளாறு ஏற்படுவதற்கு காரணம் என்ன என்பது குறித்து  தற்போது ஆராய்ந்து வருகிறோம் என தெரிவித்தார்.

 

ஒரே பகுதியில் ஏழு நபர்களுக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டுள்ள விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.