செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் சுஷில்ஹரி மெட்ரிகுலேஷன் இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் அளித்த பாலியல் வழக்கில் போக்சோ வழக்கு உள்பட 5 வழக்குகள் பதிவாகி இரண்டு வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் சிவசங்கர் பாபா அறநெறி இயக்கத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகி நடிகர் ஷண்முகராஜன் தலைமையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



 

சுஷில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளி அட்மின் மற்றும் ராமராஜ்யம் சம்ரக்ஷா அறக்கட்டளை நிர்வாகியுமான ஜானகி சீனுவாசன், வழக்கறிஞர் நாகராஜன், கே.டி. ராகவன், அவரது மனைவி மீனாட்சி ராகவன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து சிவசங்கர் பாபாமீது பொய்வழக்கு போட்டு சிறையில் அடைத்ததுள்ளனர். சிறையில் மட்டுமல்லாமல் அவரது சொத்துக்களை அபகரிக்க திட்டமிட்டு  10 ஆண்டுகளுக்கும் மேலாக பாபாவின் உண்மையான பக்தர்களாகிய எங்களை, பாபா கைதுக்கு பிறகு பிராமணன் அல்லாதவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஆலயத்திற்குள் எங்களை நுழைய விடாமல் தடுத்துவரும் ஜானகி சீனுவாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



 

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அனைத்து அதிகாரிகளையும்  சந்தித்து நேரடியாக புகார் அளித்தும். அந்த புகாரை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் செங்கல்பட்டு கோட்டாட்சியர், தாம்பரம் கோட்டாட்சியர்  என அனைத்து அதிகாரிகளும் இது குறித்து விசாரணைக்காக எங்களுக்கும் எதிர்தரப்பான ஜானகி சீனுவாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அத்தனை இடங்களுக்கும் நாங்கள் மட்டுமே விசாரணைக்காக செல்கிறோம். ஜானகி சீனுவாசன் விசாரணைக்கும் ஒத்துழைக்காமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் மதிக்காத ஜானகி சீனுவாசனை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை ஆட்சியர் வாளாகத்தை விட்டு வெளியேறுவதாக இல்லை என கொட்டும் மழையை பொருட்படுத்தாது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. 



 

இது குறித்து பேசிய நடிகர் சண்முகராஜா, பாபா குறித்து எந்த வீடியோவும் வெளியே வரவில்லை, பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளனர். வீடியோ வந்தவர்கள் மேல் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார். அதுமட்டுமின்றி பாபாவிற்கு தற்போது ஜாமீன் கிடைத்துள்ளது. இருந்தும் ஆறாவது வழக்கை பாபாவின் மீது போடுவதற்காக பணிகளை திட்டமிட்டு அரங்கேற்றி வருகிறார்கள் என கூறினார். நேற்று நள்ளிரவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சிவசங்கர் பாபா ஆதரவாளர்கள் சிலர் மட்டுமே வீட்டிற்கு சென்றனர். மற்றவர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள்ளேயே தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விடிய விடிய பாபாவின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.