சொந்த விருப்பத்தின் அடிப்படையில் பாலியல் செயலில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று  காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது. 


சென்னை சிந்தாதிரிப்பேட்டை உள்ள ஒரு மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதையறிந்த காவல்துறையினர் அங்கு ஆய்வு செய்து அதன் உரிமையாளர் உள்ளிடோரை கைது செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் உதயகுமார் என்பவர் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.


அப்போது உதயகுமார் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சொந்த விருப்பத்தின் அடிப்படையில்தான் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள். யாரும் மிரட்டி, கட்டாயப்படுத்தி இந்த தொழிலில் அவர்களை ஈடுபடுத்தவில்லை. எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் மனுதாரர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வாதாடினார். 


 




இதனையடுத்து இதற்கு எதிராக வாதாடிய அரசு வழக்கறிஞர், மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தப்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். 


இரு தரப்பு வாதங்களையும் கேட்ட, நீதிபதி முதல் தகவல் அறிக்கையில் மனுதாரர் பெயர் இடம் பெறாத நிலையில், அதன் பிறகு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் அவர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அவர் அங்கிருந்த பெண்களை விருப்பம் இல்லாமல் பாலியல் செயலில் ஈடுபட கட்டாயப்படுத்தியதாக சாட்சிகள் தரப்பில் கூறப்படவில்லை. ஆகையால் எந்த ஆதாரமும் இல்லாமல் அவர் மீது தொடங்கப்பட்ட இந்த வழக்கு ரத்துசெய்யப்படுகிறது.” என்றார். 




மேலும் உச்சநீதி மன்ற உத்தரவை மேற்கோள் காட்டிய நீதிபதி, விபசார விடுதிகளுக்கு சோதனைக்குச் செல்லும் காவல்துறையினர், பாலியல் தொழிலாளர்களை கைது செய்யவோ, துன்புறுத்த கூடாது. பாலியல் தொழில்களுக்கான விடுதிகளை நடத்துவதுதான் சட்ட விரோதம் என்று கூறப்பட்டுள்ளது. ஆகையால் வயது வந்த ஆணோ, பெண்ணோ சொந்த விருப்பத்தின் அடிப்படையில் பாலியல் செயலில் ஈடுபட்டால், அந்த தனிப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை காவல்துறையினர் தவிர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.