பெண் கிடைக்காமல் வருத்தம்


சென்னை பள்ளிகாரணை பகுதியை சேர்ந்த 32 வயதான தமிழ்வானன் கடந்த சில ஆண்டுகளாகவே தனக்கு திருமணம் செய்து கொள்ள பல வகையில் பெண் பார்த்து வந்துள்ளார். கடந்த 7 வருடங்களுக்கு மேலாக பெண் பார்த்து வந்தோம். பலவித காரணங்களால் பெண் கிடைக்காமல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தமிழ்வானனுக்கு உறவினரான சேலத்தை சேர்ந்த திருமண ஏற்பாட்டாளர் மகேஷ் என்பவர் மூலம் விருதுநகரில் பெண் ஒருவர் இருப்பதாக கூறியுள்ளனர்.




விருதுநகரில் பெண்..


கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி அன்று தமிழ்வானன் பார்க்கப்பட்ட பெண்ணை விருதுநகர் முருகன் கோயிலுக்கு வரவைத்துள்ளதாக திருமண ஏற்பாட்டாளர் கூறியதால் தாய், தந்தை, அண்ணன், அண்ணி என குடும்பத்தில் உள்ள முக்கிய நபர்களுடன் சென்னை பள்ளிகாரணையில் இருந்து சென்றுள்ளனர். ஏப்ரல் 14-ம் தேதி அங்கு சென்றதும் திருமண ஏற்பாட்டாளர் மகேஷ் கமலா என்ற பெண் திருமண ஏற்பாட்டாளர் அறிமுகப்படுத்தியுள்ளார்.


அலைக்கழிக்கப்பட்ட மணமகன்..


கமலா மேட்டூரை சேர்ந்த சிவா என்ற திருமண ஏற்பாட்டாளரிடம்தான் பெண் உள்ளது என்று அவரை அறிமுகப்படுத்திய பின்னர் காலை சுமார் 11 மணியளவில் பூஜா (36) என்ற பெண்ணை தமிழ்வானன் குடும்பத்துடன் பார்த்துள்ளார். பெண் பிடித்துள்ளதாக கூறியதும் பெண்ணிடம் மாப்பிள்ளை தமிழ்வானனை பிடித்துள்ளதா என்று கேட்க பிடித்துள்ளது என்று கூறியுள்ளார்.


 




2 லட்சம் கொடுங்கப்பு


பெண்ணை பிடித்துள்ளது என்று கூறிய பின்னர் திருமண ஏற்பாட்டாளர்கள்  பெண்ணை திருமணம் செய்து கொள்ள 2 லட்சம் என பேரம் பேசியுள்ளனர். அப்படி இப்படி என கடைசியாக 1.5 லட்சத்திற்கு பேரம் முடிந்துள்ளது. பின்னர் தமிழ்வானன் குடும்பத்தினர் வைத்திருந்த 1 லட்சத்து 35 ஆயிரம் பணத்தை அங்கு கொடுத்துள்ளனர். மீதமுள்ள 15 ஆயிரம் பணத்தை சென்னை சென்றதும் தருகிறோம் என்று கூறியுள்ளனர்.  பேரம் பேசப்பட்ட பணத்தில் ஒரு லட்சம் பூஜாவிற்கும், 50 ஆயிரம் திருமண ஏற்பாட்டாளர்களும் பிரித்து எடுத்துக்கொண்டுள்ளனர்.


ஒரே நாளில் திருமணம்


இதற்கு திருமண ஏற்பாட்டாளர்கள் மற்றும் பூஜாவிற்கு தாய், தந்தை என்று கூறி அங்கு வந்திருந்த பெண் வீட்டாரும் ஒப்புக்கொண்டு அன்று மாலை அதே முருகன் கோயிலில் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். திடீரென ஒரே நாளில் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறியதால் மாப்பிள்ளை தமிழ்வானனுக்கும் மணப்பெண் பூஜா இருவருக்கும்  கல்யாணத்திற்காக பட்டு துணி எடுத்துள்ளனர். பின்னர் மாலை 7 மணியளவில் விருதுநகர் முருகன் கோயிலில் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. உறவினர்கள் யாருமின்றி திடீரென திருமணம் நடைபெற்றதால் திருமணம் நடந்த கையோடு அங்கிருந்து தமிழ்வானன் சொந்த ஊரான சேலத்திற்கு சென்றுள்ளார்.


தி.நகரில் ஷாப்பிங்


மறுநாள் காலை உறவினர்களுக்கு பூஜாவை திருமணம் செய்து கொண்டதாக அறிமுகப்படுத்தியுள்ளார். பின்னர் அன்று இரவே சென்னை பள்ளிக்கரணைக்கு வந்துள்ளார். திருமணம் ஆன கையோடு சென்னை வந்த புதுமண பெண்ணுக்கு புத்தாடை எடுப்பதற்காக அடுத்த நாள் (16.04.2022) கணவன் மனைவி இருவரும் சென்னை தியாகராயநகரில் உள்ள பிரபல துணிக்கடைக்கு சென்று ரூபாய் 10 ஆயிரம் மதிப்பிலான துணியை எடுத்துள்ளனர்.


எஸ்கலேட்டர் -- எஸ்கேப்


புதுமன தம்பதிகள் வீட்டில் சமைக்க மளிகை பொருட்களை வாங்க மறுநாள் மாலை பள்ளிக்கரணையில் உள்ள பிரபல கடைக்கு சென்றுள்ளனர். தம்பதிகள் இருவரும் தேவையானவற்றை வாங்கி கொண்ட பின்பு வீடு திரும்புவதற்கு நகரும் படிகட்டில் (எஸ்கலேட்டர்) தமிழ்வானன் ஏறியுள்ளார். நகரும் படிகட்டில் செல்வது பயம் என்று கூறிய பூஜா படிகட்டில் கீழே வருவதாக கூறி சென்றுள்ளார். கீழே வந்த தமிழ்வானன் மனைவி பூஜைவை எங்கு தேடியும் கிடைக்காததால் அவரது செல்போனை தொடர்பு கொண்டுள்ளார். அப்பொழுது அவர் என்னுடைய வீட்டிற்கு சென்றுவிட்டேன் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தமிழ்வானன் எதற்காக என்னிடத்தில் சொல்லாமல் சென்றாய்? திருமணமா மூன்று நாட்களில் தனியே வீட்டிற்கு சென்றது நியாயமா என்று கேட்டதற்கு செல்போனை துண்டித்துவிட்டதாக கூறப்படுகிறது.




இதுகுறித்து தமிழ்வானன் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். பின்னர் தமிழ்வானன் அறையை பார்த்தபோது ரூபாய் 10 ஆயிரத்திற்கு எடுத்து வந்த புத்தாடைகள், பீரோவில் இருந்த 10 சவரன் தங்க நகை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு முன்னதாகவே திட்டம் தீட்டி யாரையோ வரவைத்து சென்னையிலிருந்து விருதுநகருக்கு தப்பி சென்றது தெரியவந்ததாக கூறினர். பின்னர் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் திருமணமான மூன்று நாட்களில் வீட்டில் இருந்த 10 சவரன் தங்க நகையை திருடிக்கொண்டு தலைமறைவாக உள்ள பூஜாவை கண்டுபிடித்து திருடுபோன தங்க நகையை மீட்டு தர வேண்டும் என புகார் கொடுத்துள்ளனர்.  பின்னர் இதுகுறித்து விருதுநகரில் உள்ள சூளக்கரை காவல் நிலையத்தில் மே மாதம் 17ம் தேதி பூஜா மீதும் திருமண புரோக்கர்கள் மீது தமிழ்வானன் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றதற்கான CSR மட்டுமே சூளக்கரை போலீசார் வழங்கியுள்ளனர்.


மதுபாட்டில் கேட்ட பூஜா


இதுகுறித்து பாதிக்கப்பட்ட தமிழ்வானன் கூறுகையில், திருமணத்திற்கு ரூ.1.50 லட்சம் தர வேண்டும் என பேரம் பேசிய நிலையில் கையில் இருந்த ரூ.1.35 லட்சம் அப்பொழுதே கொடுத்துவிட்டேன். மீதமுள்ள 15 ஆயிரத்தை கொடுக்கவில்லை என்றால் முதலிரவு நடக்க விடமாட்டோம் என திருமண ஏற்பாட்டாளர் தமிழ்வானனை மிரட்டியதாக கூறினார். மேலும் முதலிரவு அன்று அறைக்குள் சென்ற தமிழ்வானனிடம் மனைவி பூஜா மதுபாட்டில் கேட்டுள்ளார். அதற்கு அவர் இதெல்லாம் தவறு திருமணத்திற்கு முன்பு நீ எப்படி இருந்தாய் என தெரியாது.




இனிமேல் இதுபோன்ற கெட்ட பழக்கத்தை விட்டு விடு என்று கூறியதாகவும், அப்பொழுது பூஜாவின் அக்கா என்று சொல்லக்கூடிய பெண்ணிடம் வாட்ஸ்ஆப் வீடியோ காலில் பேசும்போது அவள் மது அருந்துவதை பாருங்கள் எனக்கும் மதுபாட்டில் வேண்டும் என்று கூறியுள்ளார். திருமணம் என்ற பெயரில் பணம் மோசடி செய்யும் இதுபோன்ற கும்பலை போலீசார் பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எனக்கு நேர்ந்ததுபோல் வேறு யாருக்கும் இதுபோன்ற நடக்ககூடாது என்றும் எனது பணத்தை மீட்டு தரும்படியும் கோரிக்கை வைத்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண