செங்கல்பட்டு மாவட்டம் பரனுர் சுங்கச்சாவடியில் விதிகளை மீறி கூடுதலாக 28 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தணிக்கை அறிக்கையில் கூடுதலாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

பரனுர் சுங்கச்சாவடி  ( Paranur toll gate )

 

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடி மிக முக்கிய, நுழைவு வழியாக இருந்து வருகிறது. சென்னையில் இருந்து தென்மாவட்டத்திற்கு செல்வதற்கும், தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சென்னைக்கு உள்ளே வருவதற்கும், இந்த சுங்கச்சாவடியை கடக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் இந்த சுங்கச்சாவடியில் எப்போதும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும். சுங்கச்சாவடிகளில் போதிய வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. அவ்வப்பொழுது பரனூர் சுங்கச்சாவடி தொடர்பாக , பல்வேறு சர்ச்சைகளும் நிறைந்த வண்ணம் உள்ளன.



 

மத்திய தணிக்கை குழு ( Comptroller and Auditor General ) 

 

இந்த நிலையில் சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து மத்திய தணிக்கை குழு ஆய்வு மேற்கொண்டது. இதில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்க வரியை வசூலிப்பதில்  முறையாக விதிகளை கடைபிடிக்காமல் ஓட்டிகளிடம் விதிகளை மீறி அதிக அளவு கட்டணங்களைச் வசூல் செய்து இருப்பது தெரிந்தது. 4  வழிச்சாலையை மேம்படுத்தும் போது கட்டணத்தை மாற்றி அமைக்காமல் கட்டணத்தில்,  75 சதவீதத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் 5 சுங்கச்சாவடிகளில் அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

 

அதிகளவு சுங்க வசூல்

 

பரனூர் சுங்கச்சாவடியில் முதல் திட்டப்பணி கடந்த 2020-ம் ஆண்டு முடிந்தது. 2-ம் திட்டப்பணி மார்ச் 2021-ம் ஆண்டும் தொடர்ந்து நடைபெற்றது. ஆனால் இந்த பாதையில் சுங்கக்கட்டணத்தை 75 சதவீதமாகக் சுங்கச்சாவடி குறைக்கவில்லை. இதனால் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு முதல் 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ரூ.6.54 கோடி அளவுக்கு அதிகமான சுங்க வசூல் செய்து உள்ளது.



கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது

 

இதேபோல் 1956-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு முன்பு கட்டப்பட்ட பாலத்திற்கு சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது, என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விதியில் உள்ளது. ஆனால் பரனூர் சுங்கச்சாவடியில் 1954 -ம் ஆண்டு கட்டப்பட்ட பாலத்திற்கும் கூடுதலாக கட்டணம் வசூலித்து இருக்கிறது.

 

அதிகப்படியான கட்டண வசூல்

 

கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021 வரை பரனூர் சுங்கச்சாடியில் விதிகளை மீறி வாகன ஓட்டிகளிடம் ரூ. 22 கோடி கூடுதல் சுங்கக் கட்டணத்தை வசூலித்து இருப்பது மத்திய தணிக்கை அறிக்கையில் தெரியவந்து உள்ளது. இதேபோல் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் இருபுறங்களிலும் கழிவறை கட்டப்பட வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. ஆனால் 41 சுங்கச்சாவடிகளில் பரனூர், கொடைரோடு உள்ளிட்ட 13 சுங்கச்சாவடிகளில் ஒரு புறத்தில் மட்டும் கழிவறை கட்டப்பட்டு உள்ளது. மேலும் 3 சுங்கச்சாவடிகளில் கழிவறைகள் கட்டப்பட்டு இருந்தாலும், அவை முறையாக பராமரிக்கப்பட வில்லை என்றும் தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.