காஞ்சிபுரத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் சிலம்பம் போட்டியில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சுதந்திர தினம் ( Independence Day )
காஞ்சிபுரம் ( Kanchipuram News ): வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு, வகையான கொண்டாட்டங்களுக்கு அரசு சார்பிலும் பல்வேறு அமைப்பு சார்பிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், காஞ்சிபுரம் அடுத்த கோனேரிக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தென்னிந்திய பாரம்பரிய சிலம்பு விளையாட்டு கழகம் மற்றும் பாரத் பாரம்பரிய விளையாட்டு கழகம் சார்பில் மாபெரும் சிலம்பாட்டப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு அளவில் அனைத்து மாவட்டங்களில் நடைபெற்ற போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற பள்ளி அளவிலான மாணவ, மாணவிகளுக்கிடையே போட்டி நடைபெற்றது .
இதில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம், ஶ்ரீபெரும்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் ஒற்றைக்கம்பு மற்றும் இரட்டை கம்பு பிரிவின் கீழ் போட்டிகள் 6 வயது முதல் 14 வயது வரை உள்ள மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சிறப்பாக அனைத்து பிரிவுகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. தென்னிந்திய பாரம்பரிய சிலம்ப விளையாட்டு கழக தலைவர் ரேணுகோபால், துணைத் தலைவர் மில்டன், செயலாளர் ராஜேஷ், மாவட்ட தலைவர் கண்ணன், பாரத் பாரம்பரிய விளையாட்டு கழக கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.