காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : காஞ்சிபுரம் மாவட்டம் ஆர்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முனியம்மாள் ( 20 ). செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 25.). புருஷோத்தமன் மற்றும் முனியம்மாள் ஆகியோர்களுக்கு கடந்த சில வருடம் முன்பு திருமணம் நடைபெற்று ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். புருஷோத்தமன் முனியம்மாள் தம்பதிகள் ஆர்ப்பாக்கம் கிராமத்திலேயே கூலி வேலை செய்து கொண்டு தங்கள் குழந்தைகளுடன் வசித்து வருகின்றார்கள்.




குடிப்பழக்கத்திற்கு  அடிமை

 

மது பழக்கத்துக்கு அடிமையான புருஷோத்தமன் அவ்வப்போது குடித்துவிட்டு வந்து தன்னுடைய மனைவியுடன் சண்டை போடுவது வாடிக்கையானது என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை சுமார் 5:30 அளவில் நிதானம் தெரியாத அளவிற்கு மது போதையில் வந்த புருஷோத்தமன் தன்னுடைய மனைவி முனியம்மாளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது.

 

கழுத்தில் வெட்டு 

 

ஆவேசமடைந்த புருஷோத்தமன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து  முனியம்மாளின் கழுத்தில் ஒரே வெட்டாக வெட்டினார்.  கத்தியால் வெட்டியதில் முனியம்மாளின் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்து முனியம்மாள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார். முனியம்மாளின் அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். தப்பி ஓட முயன்ற புருஷோத்தமனை பிடித்து மாகரல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனை அடுத்து உயிரிழந்த  முனியம்மாளின் உடலை மீட்ட  போலீசார்   உடற்கூறு ஆய்வுக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

 



 

காவல்துறையினர் விசாரணை

 

விரைந்து வந்த மாகரல் காவல்துறையினர் மற்றும் தாலுகா காவல் ஆய்வாளர் பேஸில் பிரேம் ஆனந்த் ஆகியோர் புருஷோத்தமனை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.  மது பழக்கத்துக்கு  அடிமையான புருஷோத்தமன், தன்னுடைய மனைவியை கொன்று விட்டு தானும் சிறைக்கு சென்ற நிலையில், அந்த மூன்று குழந்தைகளும் நிற்கதியாக நிற்கின்றன. இந்த சம்பவம் அந்த கிராமத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

 

இதுகுறித்து காவல்துறையினரிடம் தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது : கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.   இந்த நிலையில் தான் கணவன் குடிபோதையில் நேற்று சண்டையிட்டு உள்ளார்.   அப்பொழுது மனைவி கணவனிடம்,  குடித்துவிட்டு  ஏன் சண்டையிடுகிறீர்கள்? என கடுமையாக பேசியதாக தெரிகிறது.  அடிக்கடி இருவரும் சண்டையிட்டு வந்ததால் , அக்கம் பக்கத்தினரும்  சண்டையை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.   இந்த நிலையில்தான் போதையில் மனைவியை வெட்டிவிட்டு கணவன் தப்பிய பொழுது,  ஊர் மக்கள்  கணவனை பிடித்து  காவல்துறையிடம் ஒப்படைத்தனர் .  இதனை அடுத்து புருஷோத்தமனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றோம்கைது என தெரிவித்தனர்