அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையத்தில் கார் நிறுத்திமிடம் பயணிகள் வசதிக்காக மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால் வரும் 24-ஆம் தேதி முதல் மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக செயல்பாடாது என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையத்தில் உள்ள நான்கு சக்கர வாகன நிறுத்தும் பகுதி, பயணிகளின் வசதி மற்றும் பார்க்கிங் சக்கர செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் புதுப்பிக்கப்படவுள்ளது. வாகன நிறுத்தும் பகுதி சீரமைப்பு பணிகளுக்காக மார்ச் 24, 2023 முதல் மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்று திட்டம் - இனி கொஞ்ச நாட்களுக்கு இங்கேதான் பார்க்கிங்
இதற்கு மாற்றாக பயணிகள் தங்களது நான்கு சக்கர வாகனங்களை பரங்கிமலை மெட்ரோ நிலைய வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்தலாம். அதற்கென தற்காலிகமாக மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் இதைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையத்தில் மெட்ரோ பயணிகள் வழக்கம்போல் தங்களது. இருசக்கர வாகனங்களை நிறுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் சேவை
சென்னை போன்ற நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், பொது மக்கள் சாலை வழியான பயணத்திற்கு மாற்றாக மெட்டோ இரயிலில் பயணிப்பதை தேர்வு செய்கின்றனர்.
மெட்ரோ இரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது. அலுவலக நேரங்களில் காலை 8 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், சாதாரண நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகிறது.
மெட்ரோ டிராவல் கார்டு
மெட்ரோ ரயிலில் மக்கள் அதிகம் பயணிக்கும் நேரங்களில் டிக்கெட் எடுக்க நீண்ட வரிசையில் காத்திருப்பதை தடுக்க பயணிகள் மெட்ரோ கார்டுகளை பயன்படுத்தலாம். ரூ. 50 டெபாசிட் தொகை செலுத்தி (Non Refundable) மெட்ரோ கார்டுகளை பெறலாம். இதில் அதிகப்பட்ச தொகையாக உங்கள் விருப்பப்படி ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். மெட்ரோ கார்டை பயன்படுத்தி பயணிக்கலாம்.
மெட்ரோ இரயில் பெட்டிகள் எண்ணிக்கை உயர்வு
மெட்ரோ ரயிலில் பெட்டிகளின் எண்ணிக்கையை நான்கிலிருந்து ஆறாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளது.
மெட்ரோ ரயிலில் 3 பொது பெட்டி மற்றும் ஒரு மகளிர் பெட்டி இருக்கும் நிலையில் கூடுதலாக 2 பெட்டிகள் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளன. மெட்ரோ ரயிலில் பெட்டிகளை அதிகரிக்கும் சாத்தியம் குறித்து அறிக்கை தயார் செய்யப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி முடிந்து விரிவாக்கப்பட்ட மெட்ரோ ரயில் நடைமுறைக்கு வர ஒன்றரை ஆண்டுகள் முதல் இரண்டு ஆண்டுகள் ஆகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ இரயில் நிர்வாகம் - நன்றி
மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கி வரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் ’மனமார்ந்த நன்றி’ தெரிவிக்கப்பட்டுள்ளது.