கொரோனா தொற்று மற்றும் எச்3என்2 காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். 


தமிழ்நாடு முழுவதும் இன்று ஆயிரம் இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. குறிப்பாக சென்னையில் 200 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. அதில், சென்னை சைதாப்பேட்டை பகுதியில் நடைபெற்ற முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். உடன் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன்,


” சமீப காலமாக இந்தியா முழுவதும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது் காய்ச்சலை தடுக்க கடந்த வாரம் ஐசிஎம்ஆர் அறிவிப்பு வெளியிட்டது. அதனடிப்படையில் முதலமைச்சர் உத்தரவின் படி 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம் தொடங்கி சென்னையில் 200 வர்டுகளில் 200 சிறப்பு காய்ச்சல் முகாம்களும் இதை தவிர தமிழகம் முழுவதும்  800 இடங்களில் காய்ச்சல் முகாம் நடைபெறுகிறது. தேவைப்பட்டால் மருத்துவ முகாமை சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2  நாட்களிலும் நடத்தலாம்


எச் 3 என் 2 காய்ச்சல் பாதித்தவர்களுக்கு, 11 ஆயிரத்து 333 மருத்துவ கட்டமைப்புகளில் ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார, மாவட்ட, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் உட்பட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் வரை  தேவையான மருந்துகள் கையிருப்பு வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த காய்ச்சல் பெரிய அளவு பாதிப்பு ஏற்படுத்தவில்லை என்பதால மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


காய்ச்சல், உடல்வலி, சளி இருமல் தொண்டை வலி உள்ளிட்டவை இருப்பவர்கள், காய்ச்சல் பதித்தவர்கள் மூன்று முதல் நான்கு நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளவும், கொரோனா பேரிடர் காலத்தில் கடைபிடித்த விதிமுறைகளை  போல முக்ககவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.


இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஒமைக்ரான் வகை கொரோனா தாக்கம் கூடிக் கொண்டிருக்கிறது. காய்ச்சலுக்காக வருபவர்களை கண்காணிக்க கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


தினசரி 20 முதல் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு தமிழகத்தில் ஏற்படுகிறது. மக்கள் தொடர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஐசிஎம்ஆர் அறிவுறுத்தலின்படி முகக்கவசம் அணிந்து பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். காய்ச்சல் சமூகத் தொற்றாக மாறிவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.


380 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலமும் காய்ச்சல் பாதித்த மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். அது மட்டுமின்றி, காய்ச்சல் முகாமில் ஆர் டி பி சி ஆர் டெஸ்ட் தேவைப்படுவோருக்கு எடுக்கப்பட உள்ளது. இதன் மூலம் காய்ச்சல் வந்தவர்களை கண்காணிக்க உதவியாக இருக்கும் என கூறினார்.


மேலும், ஊட்டியில் சத்து மாத்திரை உண்டு மாணவி உயிரிழந்த விவகாரத்தில் மாத்திரை சரியாக வழங்கப்பட்டதா என கண்காணிக்காத இரண்டு சுகாதாரத்துறை அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாத்திரைகளை சரியாக வழங்காத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுருத்தியுள்ளார்.