அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட ஞானசேகரன் வீட்டில், சிறப்பு புலனாய்வுக் குழு ஆய்வு நடத்தியதில் பெட்டி பெட்டியாக ஆவணங்களை அள்ளிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆபாச வீடியோ இருந்ததாக கூறபட்டு வந்த லேப்டாப்பும் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.
அண்ணா பல்கலைக்கழக விவகாரம்:
கடந்த டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி, அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் , சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகர் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அமைக்கப்பட்ட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழுவானது, இவ்வழக்கை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.
ஞானசேகரன் வீட்டில் சோதனை:
இந்நிலையில், இன்று ஞானசேகரன் வசிக்கும் கோட்டூர்புரம் மண்டபம் தெருவில் , இன்று காலையில் இருந்தே 10க்கும் மேற்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். சுமார் 6 மணி நேரம் ஞானசேகரன் வீட்டில் பெட்டி பெட்டிகளாக ஆவணங்களை புலனாய்வு அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். அதில் ஞானசேகரன் குற்ற சம்பவத்தின் போது அணிந்திருந்த தொப்பி, ஆபாச படம் இருந்ததாக கூறப்படும் லேப்டாப் மற்றும் பிற ஆவணங்களையும் எடுத்துச் சென்றதாக தகவல் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு முழுவதும் மாணவிக்கு உரிய நீதி கிடைக்கும் வேண்டும் என்றும் இவ்வழக்கில் தொடர்புடைய வேறு யாரேனும் இருந்தால் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு தற்போது 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஞானசேகரனுக்கு 4 மனைவிகள் உள்ளனர். அதில் ஒரு மனைவியே அண்ணா பல்கலைக்கழக ஊழியர் ஆவார்.
எதிர்க்கட்சிகள் கேள்வி:
அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் யாரிடமோ போனில் சார் என்று பேசியதாக பாதிக்கப்பட்ட மாணவி கூறியதாக புகார் எழுந்தது. அதனால் யார் அந்த சார் என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.
அமைச்சர் சேகர்பாபு:
இவ்விவகாரம் குறித்த அமைச்சர் சேகர்பாபு, “ குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட அந்த குற்றவாளி உடனடியாக பிடிகப்பட்டு முதல் கட்ட நிவாரணமாக அவர் கட்டோடு இருந்ததை பார்த்திருப்பீர்கள். அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என நேற்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழுவானது, ஞானசேகரன் வீட்டில் நடத்திய சோதனையில், பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி, விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறது.