சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக, அண்ணா நகர் டவர் பூங்கா உள்ளது. தற்போது பொலிவிழந்து காணப்படும் அந்த பூங்காவை புதுப்பிக்க, சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மக்களின் மனதை கவரும் வகையில் புனரமைக்கப்பட உள்ள அந்த பூங்காவில், ஏராளமான வசதிகளும் வர உள்ளன.
மக்கள் மனதை கவர்ந்த அண்ணா நகர் டவர் பூங்கா
அண்ணா நகர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் மக்கள், தங்கள் மனதை ரிலாக்ஸாக்க விரும்பினால், அவர்களது முதல் ச்சாய்ஸ் டவர் பூங்காவாகத்தான் இருக்கும். இவர்கள் மட்டுமல்ல, வெளியூர்களிலிருந்து சென்னை வருபவர்களும் சுற்றிப்பார்க்க விரும்பும் ஒரு இடமாகவும் டவர் பூங்கா திகழ்கிறது. பல திரைப்படங்களில் இந்த பூங்காவில் உள்ள உயர்ந்த கோபுர வடிவ டவர் காண்பிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா வருபவர்கள் தவறாமல் இங்கு வந்துவிடுவார்கள்.
அது மட்டுமல்ல, அண்ணா நகரை சுற்றி உள்ள ஏராளமான மக்கள் இந்த பூங்காவில் வாக்கிங் செல்வது, குடும்பத்துடன் வந்து பொழுதை கழிப்பது, விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்துவது, ஆடிப்பாடி மகிழ்வது என, எல்லாவற்றிற்கும் ஏற்ற இடமாக டவர் பூங்கா உள்ளது. சிறிய குளம், Fountain என குழந்தைகள், இளம் வயதினரை கவரும் அம்சங்களும் அங்கே உள்ளன. அந்த டவர் மீது ஏறி பார்த்தால், சென்னை முழுவதையும் காணலாம்.
ஆனால், சில வருடங்களாகவே, சரியான பராமரிப்பு இன்றி, இந்த பூங்கா பொலிவிழந்து காணப்படுகிறது. இடையில் ஒருமுறை, டவர் மட்டும் புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில், பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டதால், அந்த பூங்காவை புதுப்பிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
ரூ.30 கோடியில் பல்வேறு வசதிகளுடன் புதுப்பிக்கப்படும் டவர் பூங்கா
இந்த டவர் பூங்காவை 30 கோடி ரூபாய் செலவில், வண்ணமயமாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, டவருக்கு பின்னாலேயே Fountain-கள் அமைக்கவும், 1,000 மியாவாக்கி மரங்களை பூங்காவில் நடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு, 2,000 மீன்களுடன் உள்ள சிறிய குளமும் தூர் வாரி புதுப்பிக்கப்பட உள்ளது. 133 அடி உயரம் கொண்ட டவருக்கும் பெயிண்ட் அடிக்கப்பட்டு வண்ணமயமாக மாற உள்ளது. 2,196 மீட்டர் நீளம் கொண்ட நடைபாதைகளும் முற்றிலும் அகற்றப்பட்டு, புதிய பாதைகள் அமைக்கப்பட உள்ளன.
அதோடு, குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், பெண்களுக்கான ஜிம் உருவாக்கப்பட உள்ளது. அங்கு வரும் மக்கள் அமர்வதற்காக 100 பெஞ்ச்சுகள் போடப்பட உள்ளன. இதில் ஹைலைட்டான ஒரு விஷயமாக, அங்கு வருபவர்களுக்கு இலவச வை-ஃபை வசதியும் வழங்கப்பட உள்ளது. அது மட்டுமல்லாமல், அங்கு ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே, 8 கழிவறைகளுடன் கூடிய கட்டிடம் அமைக்கப்பட உள்ளதாக, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
அதோடு, பூங்காவை பராமரிப்பதற்காக, தனியார் நிறுவனத்திடம் டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம், 3 பாதுகாவலர்கள், பூங்காவை சுத்தம் செய்ய 14 பேர் நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வார இறுதி நாட்களில், 10,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வரும் நிலையில், பார்க்கிங் வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன. மேலும், கும்பலை கட்டுப்படுத்தும் வகையில், பூங்காவிற்குள் செல்ல கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.