சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) ஆராய்ச்சியாளர்கள் எறிவிசை ஏவுகணைகளின் அச்சுறுத்தலுக்கு எதிராக நாட்டின் முக்கிய உள்கட்டமைப்பு பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் உள்கட்டமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு:
வலுப்படுத்தப்பட்ட கான்கிரீட் (Reinforced concrete – RC) பேனல்களின் எறிவிசை எதிர்ப்பை மேம்படுத்தக் கூடிய புதுமையான தீர்வுகளை வடிவமைப்பாளர்கள் உருவாக்க இக்கட்டமைப்பு உதவிகரமாக இருக்கும். ராணுவப் பதுங்குகுழிகள், அணுசக்திக் கட்டடங்கள், பாலங்கள் தொடங்கி ஓடுபாதைகள் வரை பல்வேறு முக்கிய கட்டமைப்புகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும் வலுப்படுத்தப்பட்ட கான்கிரீட்டில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
கணக்கீடு அடிப்படையிலான உருவகப்படுத்தல்களைப் பயன்படுத்தி ஏவுகணைகளால் ஏற்படும் தாக்கத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுசெய்தனர். ஊடுருவுதல், துளையிடுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும்போது ஏற்படும் தாக்கத்தால் கான்கிரீட் கட்டமைப்புகள் அதிகளவில் சேதங்களை எதிர்கொள்கின்றன.
இத்தனை விஷயங்களுக்கு பயன்படுமா?
பதுங்குகுழிகளை வடிவமைப்பதற்கு மட்டுமின்றி அணுசக்திக் கட்டடங்கள், பாலங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு கட்டமைப்பு சுவர்களை வடிவமைப்பதற்கும் இந்த அறிவியல் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆராய்ச்சியின் அடுத்த கட்டம் குறித்துப் பேசிய டாக்டர் அழகப்பன் பொன்னழகு, "இந்திய ராணுவத்துக்கு எல்லைகளிலும், அணுக முடியாத பகுதிகளிலும் பதுங்கு குழிகளை நிர்மாணிப்பதில் பயன்படுத்தக்கூடிய அவசியமிக்க இலகுரக, செலவு குறைந்த, நீடித்த மாடுலர் பேனல்களை உருவாக்குவதே எங்களின் எதிர்காலப் பணியாகும்" என்றார்.
இதுகுறித்து ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர் ரூஃப் உன் நபி தர் கூறுகையில், "ஏவுகணை தாக்கத்தின் கீழ் ஆர்.சி. பேனல்களில் பள்ளத்தாக்கு விட்டத்தை மதிப்பிடுவதற்காக ஐ.ஐ.டி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்களால் முன்மொழியப்பட்ட மாதிரி, பல சோதனை முடிவுகளுடன் சரிபார்க்கப்பட்டது. கணிக்கப்பட்ட பள்ளத்தாக்கு விட்டம் சோதனை முடிவுகளுடன் ஒத்துப்போவது அதன் நம்பகத்தன்மை மற்றும் துல்லியத்தை உறுதி செய்கிறது" என்றார்.
இதையும் படிக்க: PM Internship Scheme: கோல்டன் வாய்ப்பு! 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்! பிரதமர் உதவித்தொகைக்கு விண்ணப்பிங்க! முழு விவரம்