சென்னை மற்றும் புறநகரப் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வரும் நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு ஏன் விடுமுறை அளிக்கப்படவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

Continues below advertisement


இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘கொட்டும் மழையில் விடுமுறை அளிக்காமல் பள்ளிக்குழந்தைகளை பரிதவிக்க விடுவதா?முடிவெடுக்கும் அதிகாரம் கல்வித்துறைக்கே வேண்டும்! சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் இன்று காலை முதல் கடுமையான மழை பெய்து வரும் நிலையில், பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் இன்று வழக்கம் போல நடத்தப்பட்டதால் மாணவச் செல்வங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல பள்ளிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் நனைந்தபடியே வீடு திரும்பியுள்ளனர். மாணவர்களின் துயரத்திற்கு தமிழக ஆட்சியாளர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். டித்வா புயல் காரணமாக சென்னையிலும், வட தமிழகத்திலும் மழை பெய்யும் என கடந்த சில நாள்களாகவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்து வந்தது. இன்று காலை 7 மணியளவில் டித்வா புயல் சென்னைக்கு 60 கி.மீ தொலைவில் இருப்பதாகவும், அதனால் சென்னையில் மழை அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் கூறியிருந்தது. அதனடிப்படையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருக்க வேண்டும். அதை அரசு செய்யாததால் தான் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாயினர். மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அதிகாரம் முந்தைய திமுக ஆட்சியில் மாவட்ட ஆட்சியர்களுக்கு மாற்றப்பட்டது தான் அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம் ஆகும். சூழலுக்கு ஏற்ப பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கும் அதிகாரம் மீண்டும் கல்வித்துறைக்கே மாற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.


இந்த நிலையில், சென்னைக்கு கனமழை தொடரும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், நாளை சென்னையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.