சென்னை அடுத்துள்ள சோழிங்கநல்லூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில், நேற்று காலை பண்ணை வீடு ஒன்றில் திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பண்ணை வீட்டில் நடைபெற்ற திருமண விழாவிற்கு மணமக்களை வாழ்த்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் வந்துள்ளனர்.



 

அவ்வாறு அந்த திருமண விழாவுக்கும் வந்த, திருமண ஜோடிகளின் நண்பர்கள் சிலர், பண்ணை வீட்டின் அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலையின் ஒரு பகுதியில், குறுக்கே காரை நிறுத்தி மது அருந்தியதாக கூறப்படுகிறது. அச்சமயத்தில் அவ்வழியாக தனது இருசக்கர வாகனத்தில் அப்பகுதியை சேர்ந்த கவின் என்பவர் சென்றுள்ளார். அப்பொழுது கவின், சாலையின் குறுக்கே வாகனத்தில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த, மதுபோதை கும்பலிடம் வழி விட சொல்லி உள்ளார்.  அவ்வாறு வழிவிடசொன்னபோது காரில் இருந்த மது போதை கும்பல் வழிவிடாமல் இருந்துள்ளனர். இதனால் கவினுக்கும் அந்த கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.



 


 

இதனால் ஆத்திரமடைந்த மதுபோதை கும்பல், கவினை தாக்கியுள்ளனர். கவினை தாக்குவதை கண்ட ஊர் மக்கள், பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.  இச்சம்பவம் இருதரப்புக்கு இடையே கடும் மோதலாக மாறிய நிலையில், இருசக்கர வாகனம் மற்றும் 2 கார்கள் சேதப்படுத்தப்பட்டன. இரு தரப்பினரும் கையில் கிடைத்த பொருட்களை மாறி மாறி எடுத்து தாக்கியுள்ளனர். செங்கல், மரக்கட்டைகள், கற்கள் உள்ளிட்ட பொருட்களால் மாறிமாறி இரு தரப்பினரும் தாக்கி கொண்டனர்.



 


 

இரு தரப்பினருக்கும் நடைபெற்ற மோதலில்  சுரேந்தர் என்பவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கவினுக்கு லேசான காயம் ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இரு தரப்பினரை சமாதானப்படுத்தினர். இச்சம்பவம் தொடர்பாக கானத்தூர் காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



 

இந்த சம்பவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் எந்தவித, அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பனையூர் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

 


மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு...




Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X