மலேசியன் ஏர்லைன்ஸ்
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்ல வேண்டிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், இன்று காலை 11:45 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டும். இந்த விமானம் கோலாலம்பூரில் இருந்து இன்று காலை 10:45 மணிக்கு 194 பயணிகளுடன் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இதே விமானம் மீண்டும் காலை 11:45 மணிக்கு சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்டு செல்லும்.
பாதுகாப்பு சோதனை
அந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில், சென்னையில் இருந்து கோலாலம்பூர் செல்வதற்காக 159 பயணிகள் இருந்தனர். அவர்கள் அனைவரும் காலை 9:30 மணிக்கு முன்னதாகவே, சென்னை விமான நிலையத்திற்கு வந்து, பாதுகாப்பு சோதனை, சுங்கச் சோதனை, குடியுரிமை சோதனை உட்பட அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர்.
கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானி, விமானத்தில் பயணிகளை ஏற்றுவதற்கு முன்னதாக, விமானத்தின் இயந்திரங்களை சரிபார்த்தார். அப்போது விமானத்தில் இயந்திர கோளாறு இருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் விமான வானில் பறப்பது ஆபத்து என்று கருதிய விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதை அடுத்து பயணிகள் விமானத்தில் ஏற்றப்படவில்லை.
அவசர, அவசரமாக உணவு
விமானம் தாமதமாக, இன்று பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பொறியாளர்கள் விமானத்தை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆகியும், விமானம் புறப்படவில்லை. இதை அடுத்து பல மணி நேரம் காத்திருந்த பயணிகள் சோர்வடைந்தனர். விமான நிறுவன அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பயணிகளுக்கு அவசர, அவசரமாக உணவு வழங்கப்பட்டது. விமானம் மாலை 4 மணிக்கு புறப்பட்டு விடும் என்று உறுதி அளிக்கப்பட்டது. பயணிகளும் காத்திருந்தனர்.
கடும் வாக்குவாதம்
ஆனால் மாலை 4:30 மணிக்கு மேல் ஆகியும் விமானம் புறப்படவில்லை. விமான பொறியாளர்களால், விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறுகளை சரி செய்ய முடியவில்லை. இதை அடுத்து 7 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்த பயணிகள் மீண்டும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக விமான நிறுவன அதிகாரிகள், விமானம் இன்று ரத்து என்று அறிவித்தனர். அதோடு பயணிகள் 159 பேரையும் சென்னை நகரில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்தனர். விமானம் பழுதுபார்க்கப்பட்டு நாளை காலையில் மீண்டும் சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னையில் இருந்து கோலாலம்பூர் செல்ல வேண்டிய 159 பயணிகள், 7 மணி நேரத்திற்கு மேல் சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தும், விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு சரி செய்ய முடியாமல், விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், 159 பயணிகளும்,சென்னை நகரில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தவித்துக் கொண்டு இருக்கின்றனர். இதற்கிடையே இந்த விமானத்தில் 159 பயணிகள், 8 விமான ஊழியர்கள் உட்பட 167 பேர் பயணிக்க இருந்தனர். ஆனால் விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறை, விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து எடுத்த நடவடிக்கையால், விமானம் வானில் பறப்பது நிறுத்தப்பட்டது. அதோடு பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டு, 167 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.