செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்துள்ள கன்னடபாளையம் குப்பை மேடு பகுதியை சேர்ந்தவர் பிரியா. இவருடைய கணவர் பழனி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இவருக்கு 3 பெண் பிள்ளையும் மூன்று ஆண் பிள்ளைகளும் உள்ளனர். மூத்த மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு அரசினர் சிறப்பு இல்லத்தில் ( சீர்திருத்தப்பள்ளி)  6 மாதம் கைதியாக இருந்து வந்துள்ளார் . 17 வயது சிறுவன் கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.




பேட்டரிகளை திருடிய வழக்கு 


இந்த நிலையில் தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படையினர் எல்லைக்கு உட்பட்ட தாம்பரம் பகுதியில் ரயில்வே தண்டவாளம் அருகே இருக்கும் பேட்டரிகளை திருடிய வழக்கு சம்பந்தமாக கடந்த இருபத்தி ஒன்பதாம் தேதி ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் டிசம்பர் 30 தேதி மாலை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி விட்டு செங்கல்பட்டு சிறப்பு இல்லத்தில் பிரியாவின் மூத்த மகனை அடைத்துள்ளனர்.


மகன் உயிரிழந்ததாக தாய் புகார்


இதனை அடுத்து டிசம்பர் மாதம் முப்பத்தி ஒன்றாம் தேதி மாலை 5 மணி அளவில் பிரியாவிற்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட சிறப்பு இல்ல காவலர்கள், தங்களின் மகனுக்கு உடல்நிலை சரியில்லை என தெரிவித்துள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்த காவலர்கள் மிக மோசமான நிலையில் மகன் இருப்பதாகும் தெரிவித்துள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட போலீசார் மகன் உயிரிழந்ததாக கூறினர்.


உடல் முழுவதும் காயங்கள் 


இந்த நிலையில் சனிக்கிழமை மாலை உயிரிழந்த தனது மகனின் சடலத்தை கூட பார்க்க விடவில்லை என தாய் பிரியா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் . மேலும் இதுகுறித்து கூறுகையில், “ஒரு சில நிமிடங்களிலே உடல்நிலை சரியில்லை என கூறியவர்கள், எனது மகன் உயிரிழந்து விட்டார் என தெரிவித்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. என்னுடைய மகன் தாம்பரம் ரயில்வே காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட பிறகு நேரில் சந்தித்த பொழுது மகன் நலமுடன் இருந்தான், நான் சில நிமிடங்கள் என் மகனுடன் பேசிக் கொண்டுதான் இருந்தேன். இது மட்டுமல்லாமல், சிறைக்கு அனுப்புவதற்கு முன்பு கூட தொலைபேசி வாயிலாக பேசினேன் நன்றாகத்தான் இருந்தான். ஆனால் இப்பொழுது  உயிரில்லா என் மகனின் உடலை பார்த்தால், உடல் முழுவதும் காயங்கள் உள்ளன. முகத்தில் தழும்புகள் உள்ளன, என் மகனை ஏதோ செய்துவிட்டார்கள் , அடித்து கொலை செய்துள்ளனர். எனது மகனின் சாவிற்கு , நீதி வேண்டும்” என கண்ணீர் மல்க தெரிவிக்கிறார் பிரியா. இது தொடர்பாக தாய் பிரியா மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு ஒன்று அளித்துள்ளார். 




இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, சிறைக் காவல் கண்காணிப்பாளர் மோகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிபதி விசாரணைக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தனர்.



பிரியா