அட்சய திருதியை முன்னிட்டு இன்று சென்னையில் உள்ள நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 


அலைமோதும் மக்கள் கூட்டம்


அட்சய திருதியை தினத்தன்று எந்த பொருள் வாங்கினாலும் அது மென்மேலும் பெருகும் என்பது நம்பிக்கை. இதனால் இந்நாளில் மக்கள் தங்கம் வைரம், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவது வழக்கம். இந்நிலையில் சென்னை தியாகராயா நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஏராளமான நகைக்கடைகளில் திரளான மக்கள் கூட்டம் காணப்படுகின்றது. இந்த நாளில் ஒரு குண்டுமணி தங்கத்தையாவது வாங்கி விட வேண்டும் என்பது தான் பெரும்பாலான மக்களின் எண்ணமாக உள்ளது. 


தங்கத்தின் விலை மளமளவென உயர்ந்துள்ள நிலையிலும் இன்று தங்கத்தை வாங்கியே தீர வேண்டும் என மக்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்கத்தை வாங்கிச் செல்கின்றனர். 


இன்றைய தங்கத்தின் விலை


அட்சய திருதியை முன்னிட்டு தங்கத்தின் விலை முன்கூட்டியே மாற்றப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. வழக்கமாக காலை 9 மணிக்கு மேல் தங்கம் விலை மாற்றபடும். ஆனால் இன்று காலை 7.29 மணிக்கே மாற்றப்பட்டுள்ளது. தங்கத்தின் விற்பனையை அதிகரிக்க நகைக்கடைகளை முன்கூட்டியே திறந்து வைத்து உரிமையாளர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.


சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.44,840- க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.60 குறைந்து, ரூ.5,605-க்கு விற்பனையாகிறது.


வெள்ளி விலை


சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 90 காசுகள் குறைந்து ரூ.80.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி கிலோ ரூ.80,400-க்கு விற்பனையாகிறது. ஸ்ரீ சனீஸ்வரர் மனித உருவத்தில் வந்து அட்சய திருதியை அன்று பிட்சை எடுத்து அன்னதானம் அளித்துத் தனக்கு ஏற்பட்ட ஊனக் குற்றங்களைப் போக்கிக் கொண்டார் என்று கூறப்படுகிறது.


உடல் ஊனமுற்றவர்கள், மிகவும் குண்டாக இருப்பவர்கள் திருதியை திதி நாட்களில், ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு நவதானியங்களும் ஏனைய பருப்பு வகைகளும் பதித்த சந்தன அட்சயக் காப்பும் சார்த்தி வணங்குவது சிறப்பு. முழு முந்திரி மற்றும் பாதாம் பருப்புகளால் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் உடல் வகைத் துன்பங்கள் அகலும் என்பது ஐதீகம். வழிபாட்டிற்குப் பிறகு தானியங்களையும் முந்திரிகளையும் தானமாக ஏழைகளுக்கு அளிக்க வேண்டும் என ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.


எதை தானமாக கொடுக்கலாம்


இந்நாளில் தானம் கொடுப்பது மிகவும் சிறந்தது. ஏழைகளுக்கு தயிர்சாதம் வழங்கலாம். சித்தர்கள் ஜீவசமாதி உள்ள ஆலயங்களுக்குச் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என கூறப்படுகிறது. அன்னதானம் செய்யலாம். ஆலயங்களுக்கு உங்கள் சார்பில் ஏதாவதொரு பூஜைக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கித்தரலாம். வயதானவர்களுக்கு குடை, செருப்பு உள்ளிட்டவற்றை தானம் செய்யுங்கள். நீர்மோர் பானகம் வழங்கலாம்.