சென்னை ( Chennai News ) : சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், இன்று காலை 10:05 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் 147 பயணிகள் பயணிக்க இருந்தனர். இந்தப் பயணிகள் அனைவரும் காலை 8:30 மணிக்கு முன்னதாகவே சென்னை விமான நிலையத்திற்கு வந்து பாதுகாப்பு சோதனை உள்ளிட்ட அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு விமானத்தில் ஏற தயாராக இருந்தனர். 


டெல்லியில் இருந்து வழக்கமாக காலை 9 மணிக்கு வரும் ஏர் இந்தியா விமானமே, மீண்டும் காலை 10:05 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டு செல்லும். அதேபோல் டெல்லியில் இருந்து வரும் விமானம் காலை 9 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தது. அந்த விமானத்தை இயக்கி வந்த விமானி, விமானத்தில் இயந்திர கோளாறு இருப்பதாகவும், அதை சரி செய்த பின்பு, மீண்டும் விமானத்தை இயக்கும்படியும் குறிப்பு எழுது வைத்து விட்டார்.


இதை அடுத்து விமானத்தில் ஏற வந்த பயணிகளை, விமானத்தில் ஏற்றப்படவில்லை. விமானம் தாமதமாக புறப்படும் என்று கூறி, ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். அதோடு விமான பொறியாளர்கள், விமானத்துக்குள் ஏறி, இயந்திரங்களை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பகல் 12 மணி வரையில் விமானத்தின் இயந்திரங்கள் சரி செய்யப்படவில்லை. இதை அடுத்து விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ள பயணிகள், சென்னை விமான நிலையத்தில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தவித்துக் கொண்டு இருந்தனர்.


இந்த நிலையில் 147 பயணிகளையும் மாற்று விமானங்கள் மூலம், டெல்லிக்கு அனுப்பி வைக்க சென்னை விமான நிலைய அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்து கொண்டு இருக்கின்றனர். சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக 147 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் காத்திருந்து தவிக்கும் நிலை ஏற்பட்டதால், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


பகல் 2 மணி வரை


இன்று சனிக்கிழமை பகல் 2 மணி வரையில், ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு சரி செய்யப்படவில்லை. இதனால் நான்கு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த  பயணிகள்,  ஆத்திரமடைந்து ஏர் இந்தியா அதிகாரிகளிடம் கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபட்டனர். இதை அடுத்து இன்று பகல் 2 மணிக்கு, விமானம் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்தது. அதோடு விமானத்தில் பயணிக்க இருந்த 147 பயணிகளையும், இண்டிகோ, விஸ்தாரா, மாலை மற்றும் இரவு சென்னையில் இருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானங்கள், போன்ற மாற்று விமானங்களில் டெல்லிக்கு அனுப்புவதற்கு டிக்கெட் மாற்றி வழங்கினர். சில பயணிகள் டெல்லி விமான பயணத்தையே ரத்து செய்துவிட்டு, விமான டிக்கெட் கட்டணங்களை திரும்ப பெற்றனர்.