திருவண்ணாமலை (Tiruvannamalai News): திருவண்ணாமலை பே கோபுரம் 11-வது தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் வாசுதேவன் வயது (36). இவர் இந்து மகா சபாவில் மாவட்ட தலைவராக உள்ளார். இவர் சமூக வலைதளத்தில் டிக்டாக் செய்து தனது வீடியோக்களை பதிவேற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதற்காக, நேற்று இரவு மது போதையில் இருசக்கர வாகனத்தில் திருவண்ணாமலையில் அதிவேகத்தில் வலம் வந்த வாசுததேவன் அதனை தமது நண்பர்கள் மூலம் வீடியோ பதிவு செய்துள்ளார்.


 






 


போதையில் ரகளையில் ஈடுபட்ட இந்து மகா சபை தலைவர் 


மேலும், திருவண்ணாமலை பே கோபுரம் சாலை பகுதியில் அதிவேகமாக பைக்கில் சென்று, அங்கு போக்குவரத்து சீரமைப்புக்காக வைத்திருந்த சாலை தடுப்பான் (பேரிகார்டு) மீது மோதியுள்ளார். அப்போது, நிலைத்தடுமாறி கீழே விழுந்தபோதும் வீடியோ பதிவை நிறுத்தவில்லை. அங்கிருந்து எழுந்துச்சென்று அந்த பகுதியில் இருந்த சாலை தடுப்புகளை உதைத்து கீழே தள்ளி சேதப்படுத்தியுள்ளார். இந்த வீடியோவை 'கெத்தா நடந்து வரான், கேட்டை எல்லாம் கடந்து வரான், மரணம் மாசு மரணம், டப்பு தரணும்' எனும் ரஜினியின் பாடல் பின்னணியில் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ ரீல்ஸ் சமூகவலைதளத்தில் வைரலாக பரவியது. அதைத்தொடர்ந்து இந்த அத்துமீறலில் ஈடுபட்டவரை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன்பேரில், திருவண்ணாமலை நகர துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையிலான காவல்துறையினர், சாலையில் அத்துமீறலில் ஈடுபட்டு ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட, இந்து மகா சபை மாவட்ட தலைவர் வாசுதேவனை கைது செய்தனர்.


 




இந்து மகா சபை தலைவர் கைது


நெற்றியில் பட்டை, காவி உடை என பகல் முழுவதும் பக்திப்பெருக்காக வலம் வரும் இந்து மகா சபை மாவட்ட தலைவர் வாசுதேவன், இரவில் மது போதையில் இதுபோன்ற அத்துமீறலில் ஈடுபடுவது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. மேலும், சமூக வலைதளத்தில் லைக் மற்றும் கமென்ட் கிடைக்கும் என்ற ஆசையில் வீடியோ எடுத்ததாக அவர் தெரிவித்தாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, பொது சொத்துக்களை சேதப்படுத்தியது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இந்து மகா சபை தலைவர் வாசுதேவன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நீதியரசர் முன்னிலையில் ஆஜர்படுத்தி வாசுதேவனை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.