அத்தியாவசிய விலை உயர்வை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வி சோமசுந்தரம் தலைமையில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் (Kanchipuram News): கடந்த சில நாட்களாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களில் விலைவாசி உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் அனைத்து ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. விலைவாசி உயர்வு காரணமாகச் சாதாரண ஏழை, எளிய மக்கள் வாழவே முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் அதிமுக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகாமையில் காவலன் கேட் பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமையில் காய்கறி விலை அத்தியாவசிய விலை உயர்வை கண்டித்து காய்கறிகளை மாலையாக கோர்த்து மாலை அணிந்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விலைவாசி உயர்வை கண்டித்து தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் வி சோமசுந்தரம் பேசியதாவது : மகளிர் உரிமை தொகை அனைத்து பெண்களுக்கும் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் திமுக கூறியிருந்தது ஆனால் இப்பொழுது தகுதி உள்ள பெண்களுக்கு தான் என கூறி மழுப்பி வருகின்றனர். அவர்கள் சொல்லும் தகுதியை வைத்து பார்த்தால் ஒரு ஊரில் 10 பேருக்கு கூட இந்த திட்டம் போய் சேராது என தெரிகிறது. பின்பு எதற்கு இந்த திட்டம் என கேள்வி எழுப்பினார். அதேபோன்று சமீபகாலமாக தமிழக அரசின் கடன் அதிகரித்துள்ளது ஆனால் அதனால் மக்களுக்கு என்ன கிடைத்துள்ளது என தெரியவில்லை. அவ்வப்பொழுது கட்டிடங்கள் கட்டி அந்த கட்டிடத்திற்கு கலைஞர் பெயரை சூட்டுகின்றனர் என குற்றச்சாட்டை முன் வைத்தார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்