அதிமுக அலுவகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோரி ஓபிஎஸ், ஈபிஎஸ் தாக்க செய்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இந்த வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மிகுந்த பரபரப்புக்கிடையே, கடந்த 11 ஆம் நடந்த அதிமுக பொதுக்குழு இராண்டாவதாக கூடிய நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பூட்டி இருந்த அதிமுக அலுவகத்தை உடைத்து உள்ளே நுழைந்தனர். இதனையடுத்து அங்கு கூடியிருந்த எடப்பாடி ஆதரவாளர்களுக்கும், அவர்களுக்குமிடையே மோதல் உண்டானது. இந்த மோதல் கலவரமாக வெடித்தது.
இதனால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, காவல்துறை தனது அதிகாரத்தை பயன்படுத்தி, வருவாய் துறை மூலம் சட்டப்பிரிவு 145 பயன்படுத்தி அதிமுக அலுவலகத்தை சீல் வைத்து மூடியது. இந்த நிலையில் அதிமுகவின் அலுவலத்தின் சீலை அகற்றக்கோரி ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கானது இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இரு தரப்பும் காரசார விவாதம் நடத்திய நிலையில், இறுதியில் பேசிய நீதிபதி பொதுக்குழு அன்று காலை 8.30 மணியிலிருந்து மாலை வரை நடந்ததை வீடியோ ஆதாரமாக சமர்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை நாளை ஒத்தி வைத்து இருக்கிறார்.
நீதிமன்றத்தில் ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்பு நடத்திய விவாதத்தையும், தொடர்ந்து நீதிபதி பேசியதையும் இங்கு பார்க்கலாம்.
இபிஎஸ் தரப்பு
- முன்னாள் முதலமைச்சரே ஒரு கும்பலை கூட்டிக்கொண்டு தலைமை அலுவலகத்தை தாக்கியது துரதிஷ்டமானது. காவல்துறையின் தோல்வியையே இந்த சம்பவம் காட்டுகிறது. ஓ.பி எஸ் ஆட்களை காவல்துறையினர் தடுக்கவில்லை.
தொலைக்காட்சிகளில் வந்த நேரலைகளை பார்த்தாலே ஓ.பி.எஸ் ஆட்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தியது தெரியும். கல், கம்பு, இரும்பு உள்ளிட்ட பொருட்களை கொண்டு தாக்கினர்.
- கட்சி அலுவலகம் ஒன்றும் தனிநபர் சொத்தல்ல. தற்போது ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளரும் அல்ல. அவரை கட்சியில் இருந்து நீக்கி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அலுவல சொத்து தொடர்பாக எந்த பிரச்சினையும் இல்லை. அது அதிமுக கட்சி வசம் உள்ளது. கட்சி விதிப்படி தலைமை கழக செயலாளர் தான் தலைமை அலுவலகத்தில் பொறுப்பாளர் என தெரிவிக்கப்பட்டது.
ஓபிஎஸ் தரப்பு
- கட்சி அலுவலகத்திற்குள் நுழைய கூடாது என எந்த நீதிமன்ற உத்தரவும் கிடையாது. கட்சி அலுவலத்திற்குள் நுழைய எனக்கும் உரிமை உள்ள போது என்னை உள்ளே நுழைய விடாமல் கதவை பூட்டி வைத்தனர். பொருளாளரான என்னை உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர். சீல் வைத்த உத்தரவுக்கு நான் எதிர்ப்பு தான் தெரிவிக்கிறேன்.
அரசு தரப்பு
- மியூசிக் அகாடமியில் இருந்து அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சி அலுவலகம் வரை 300 போலீசார் நிறுத்தப்பட்டனர். நாங்கள் காலை 8:30 மணியளவில் OPS ஐ நிறுத்த முயற்சித்தோம், ஆனால் அவர் ஒரு கார்டினேட்டர் என்று கூறி, அலுவலகத்திற்குச் செல்ல தனக்கு உரிமை உண்டு என்று கூறி பூட்டை உடைத்தார். பூட்டை உடைத்து திறந்து பார்த்தபோது, இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
- நாங்கள் சுமார் 9 மணிக்கு லத்தி சார்ஜ் செய்யத் தொடங்கினோம், அது காலை 10 மணிக்கு வன்முறை அதிகரித்தது.
நீதிபதி
- சண்டையிட விரும்பினால் கால்பந்து மைதானத்தை வாடகைக்கு எடுக்கலாம். மோதலில் ஈடுபட்டவர்களை சிசிடிவியை பயன்படுத்தி கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீங்கள் காலை 8:30 மணி முதல் என்ன நடந்தது என்பது குறித்த நாளை மாலை அறிக்கை தாக்கல் செய்யுங்கள் என அரசு தரப்புக்கு நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.