மெட்ரிக் டன் நெல் உற்பத்தி 1.22 கோடி ஆக அதிகரிப்பு


தமிழ்நாட்டில் 2020-2021இல் 1.04 கோடி மெட்ரிக் டன் நெல் உற்பத்தி இருந்த நிலையில், 2021-22 ல் அது 1.22 கோடி மெட்ரிக்டன்னாக அதிகரித்துள்ளது. இதில் பெரும் பங்கு காவிரி டெல்டாவுக்கு உண்டு. அதைப் பாதுகாப்பது அரசின் கடமை என அப்பகுதி மக்கள் முன்னெடுத்த போராட்டங்களுக்குப் பிறகு, ‘ பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மசோதா ’ 2020 - ல் அறிமுகப்படுத்தப்பட்டது.


எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ; 


மீத்தேன் திட்ட எதிப்பு கூட்டமைப்பு சார்பாக, வேளாண் மண்டலப் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்ற முழக்கத்தோடு, பேராசிரியர் த.செயராமன் அவர்களின் தலைமையில், பூம்புகார் தொடங்கி தஞ்சை வரையிலான மண்ணின் மக்களின் நடைபயணம் தமிழக காவல்துறையால் வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. வேளாண் மண்டலப் பாதுகாப்பை உறுதி செய்வோம் என வலியுறுத்தி ஜனநாயக ரீதியில் அமைதியான வழியில் நடைபயணம் மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தடை ஜனநாயக விரோதமானது. காவல்துறையின் இந்த நடவடிக்கை கண்டிக்கதக்கது.


பாதுகாப்பு மண்டலம்


காவிரி டெல்டா மாவட்டங்கள் வேளாண் பாதுகாப்பு மண்டலமாக கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ஆனாலும், வேளாண் மண்டலத்தை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடைபயணம் மேற்கொள்வதற்கு மட்டுமின்றி, வாகனம் மூலமாக சென்று பிரச்சாரம் செய்யவோ, துண்டறிக்கைகள் கொடுக்கவோ கூட எவ்வித அனுமதியும் இல்லை எனவும், மீறினால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும் எனவும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


மேலிடத்து உத்தரவு


ஜனநாயக ரீதியில் நடைபெறும் நடைபயணத்திற்கான தடைக்கு உரிய காரணத்தை தெரிவிக்காமல் மேலிடத்து உத்தரவு என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்திருப்பதன் மூலம், யாரை திருப்திபடுத்த இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்கிற கேள்வி எழுகின்றது. 


தமிழக அரசின் கருத்துரிமைக்கு எதிரான இந்த நடவடிக்கை கைவிடப்பட வேண்டும். ஜனநாயக வழி போராட்டங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு அனுமதி அளிப்பது தான் உண்மையான மக்களாட்சி தத்துவத்தை பூர்த்தி செய்யும் என்பதை உணர்ந்து தமிழக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, மீத்தேன் திட்ட எதிப்பு கூட்டமைப்பின் நடைபயணத்திற்கு அனுமதி வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.


இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.