தமிழ்நாட்டில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், சமீபநாட்களாக மழை பரவலாக பெய்து வருகிறது. இந்த சூழலில், சென்னையில் நேற்று இரவு மழை கொட்டித் தீர்த்தது.


சென்னையில் கனமழை:


சென்னையில் நேற்று பெய்த மழையால் சாலையில் மழைநீர் பல பகுதிகளில் வெள்ளம் போல தேங்கியிருக்கிறது. தற்போது வரை பல இடங்களில் மழைநீர் வடியாமல் இருக்கிறது. இதனால், காலையில் பணிக்குச் செல்பவர்கள், பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

கார்த்தி சிதம்பரம் கேலி:


இந்த நிலையில், சென்னையில் பல பகுதிகளில் மழைநீர் சாலைகளில் வெள்ளம் போல தேங்கியிருப்பதை சுட்டிக்காட்டி மக்களவை உறுப்பினர் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் ரேஸ் ரோட் vs ரெயின் ரோட் என்று பதிவிட்டுள்ளார். அதாவது, பந்தய சாலை vs மழை சாலை என்று பதிவிட்டுள்ளார்.






சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்றது, இந்த கார் பந்தயத்திற்கு சிலர் வாழ்த்துகள் கூறினாலும், சென்னையின் முக்கிய பகுதியில் நடத்தப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். ஆனாலும், பார்முலா 4 கார் பந்தயத்தை தமிழக அரசு வெற்றிகரமாக நடத்தி முடித்தது.


இந்த நிலையில், சென்னையில் சாலைகளில் மழைநீர் தேங்கியிருப்பதையும் சென்னை சாலைகளில் கார் பந்தயம் நடத்தப்பட்டதையும் ஒப்பிட்டு கேலி செய்யும் விதமாக கார்த்தி சிதம்பரம் இதை பதிவிட்டுள்ளார். கார்த்தி சிதம்பரத்தின் இந்த பதிவிற்கு கீழே பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


இன்னும் வடியாத மழைநீர்:


சென்னையில் நேற்று பெய்த கனமழையால் கோயம்பேடு, வடபழனி, ஆவடி உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் இன்னும் வடியாமல் தேங்கி நிற்கிறது. நேற்று இரவு மழை பெய்தபோது அண்ணாநகர், ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, தி.நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல ஓடியது. இந்த வீடியோக்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.


சென்னையில் மழைநீர் தேங்காத அளவிற்கு வடிகால் பணிகள் செய்யப்பட்டுள்ளதாக தி.மு.க. அரசு கூறிய நிலையில், சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் வீசிய புயலால் ஒட்டுமொத்த சென்னையும் நிலைகுலைந்தது. தற்போது மீண்டும் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் இதற்கு நிர்ந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.