கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அத்திவரதர் புகழ்பெற்றதும், உலக பிரசித்திப்பெற்றதுமான ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவத்தின் 3ம்நாள் கருடசேவையும், அதே போல ஆனி மாதம் ஆனி கருட சேவையும், ஆடி மாதம் ஆடி கருடசேவையும் என ஆண்டிற்கு 3 முறை கருடசேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு ஆடி மாதத்தையொட்டி நேற்று ஆடி மாத கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதையொட்டி உற்சவர் வரதராஜப்பெருமாள் ரோஸ் மற்றும் வண்ண பட்டு உடுத்தி பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரத்தில் தங்க கருட வாகனத்தில் கோவில் உட்பிரகாரத்தில் "கோவிந்தா ....கோவிந்தா..." என்ற பக்தர்களின் பக்தி கரகோசங்களுடன் எழுந்தருளினார்.
அதன்பின் தீபாராதனைகள் காட்டப்பட்டு கோவிலிலிருந்து தங்க கருட வாகனத்தில் புறப்பட்ட உற்சவர் வரதராஜப் பெருமாள் கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து அதன் பின் 4 மாடவீதிகளில் திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள்பாலித்தார். வழியெங்கிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா.....வரதா வரதா, அத்தி வரதா.... என பக்தி பரவசத்துடன் கோசங்களை எழுப்பி கற்பூர தீபாராதனைகளை சமர்பித்து சாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில்
திருக்கச்சி அல்லது காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் என்பது பெருமாள் கோயில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது. வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தலம். இத்திருக்கோயிலின் இராஜகோபுரம் மேற்கு நோக்கி அமைந்தள்ளது. காஞ்சியில் தெற்குப் பகுதி - நகரத்திற்கு மையத்தில் அமைந்துள்ள திருக்கோயிலாகும். மூலவர் வரதராஜப் பொருமாள் மேற்குப் பார்த்த வண்ணம், நின்ற திருக்கோலத்தில் சேவார்த்திகளுக்கு அருள் புரிந்து கொண்டுள்ளார். பெருந்தேவி தாயார் கிழக்கு பார்த்த வண்ணம் எழுந்தருளி சேவார்த்திகளுக்கு அருள்புரிந்து கொண்டுள்ளார்.
அத்திவரதர் :
இத்திருக்கோயிலினுள், வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள திருக்குளத்தில், அத்தி மரத்தால் செய்யப்பட்ட, கிடந்து நிலையில் உள்ள அத்திவரதர் சிலையை 40 வருடங்களுக்கு ஒரு முறை வெளியில் எடுத்த முறைப்படி பூசைகள் செய்து, ஒரு மண்டலகாலம் பொது மக்களின் தரிசனத்திற்காக வைப்பது வழக்கமாக உள்ளது. கடைசியாக 1979 ஆம் அண்டு எடுக்கப்பட்ட பொது மக்களின் பார்வைக்கும், தரிசனத்திற்கும் வைக்கப்பட்டது.
திருவிழாக்கள் :
பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இடம்பெற்றுள்ள 108 வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இதில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலும் ஒன்று. வரதராஜ பெருமாள் அஷ்ட நட்சத்திரத்தில் பிறந்தவர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் அஷ்ட நட்சத்திரம் பிறக்கும் தேதியில் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ விழா தொடங்கும். இவ்விழா 10 நாள்கள் நடைபெறுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்