விஜய் மக்கள் இயக்கம் மகளிர் அணி ஆலோசனை கூட்டம் இன்று சென்னையில் நடைபெற உள்ளது


 


 விஜய் மக்கள் இயக்கம்



நடிகர் விஜய் தலைமையில் விஜய் மக்கள் இயக்கம் செயல்பட்டு வருகிறது. இது விரைவில் அரசியல் கட்டியாக மாறலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் 100-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று இருக்கின்றனர். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு அணிகளும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், இன்று  சென்னை அருகே உள்ள பனையூரில் உள்ள மக்கள் இயக்க தலைமை அலுவகலத்தில் இன்று  நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இந்த ஆலோசனைக் கூட்டம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற உள்ளது.




தொடரும் ஆலோசனை


விஜய் பயிலகம், சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு என விஜய் மக்கள் இயக்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.  வழக்கறிஞர் அணி, ஐ.டி. அணி என தனித்தனியாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதே. இந்த சூழலில் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணியை வலுப்படுத்துவதற்காக மாவட்ட மகளிர் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறும் என்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மக்கள் இயக்கத்தின் அடுத்தகட்ட நகர்வாக இந்த அறிவிப்பு வெளியிடப்படுள்ளது.


மாணவர்களுக்கு பரிசு 


முன்னதாக நடிகர் விஜய் 234 தொகுதிகளிலும் 10 ஆவது மற்றும் 12ஆவது பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த தமிழ்நாடு மாணவ மாணவியர்களுக்கு உதவித் தொகை வழங்கினார் . இந்த நிகழ்வில் காமராசர், அம்பேத்கர், பெரியார் ஆகியோரைப் படிக்க வேண்டும் எனக் கூறிய நிலையில், விஜய்யின் இந்தப் பேச்சு அவரது அரசியல் பயணத்திற்கான வேலைகளை விஜய் செய்து வருகிறார் என்று பேசப்பட்டது.




 


 இதனைத் தொடர்ந்து,  கடந்த ஜூலை 15ஆம் தேதி காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு 234 தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி பயிலகங்கள் தொடங்கப்பட்டன. தற்போது வரை தமிழ்நாட்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 124 பயிலகங்கள் வரை  திறக்கப்பட்டுள்ளது.


ஆலோசனைக் கூட்டத்தில் நடக்கப்போவது என்ன ?


விஜய் பிற அணிகளை காட்டிலும் மகளிர் அணியை சிறப்பாக கட்டமைக்க உத்தரவு பிறப்பித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் அடிப்படையில் மாநில வாரியாக மற்றும் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் முழுமையாக நியமிக்கப்பட்ட பிறகு, தொகுதி வாரியாக மகளிர் அணி நிர்வாகிகளை நியமிக்கவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மகளிர் அணி நிர்வாகிகளுக்கு, மக்களை எவ்வாறு அணுகுவது என்பது குறித்து பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. மகளிர் அணி நிர்வாகிகள் எவ்வாறு மக்கள் இயக்கத்தில் , எவ்வாறு பணி செய்ய வேண்டும் என்பது குறித்தும், அறிவுரை வழங்கப்பட உள்ளது. குறிப்பாக ' விஜய் மக்கள் இயக்கம் 'அடுத்த கட்ட நகர்வை நோக்கி செல்லும் பொழுது என்ன மாதிரியான அணுகுமுறைகளை செய்ய வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது 
மகளிர் அணி தொடர்ந்து விரைவில் தொண்டரணி, உள்ளிட்ட பிற அணி நிர்வாகிகளிடம் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட உள்ளது.